தீபக், சசிகலா மீது தீபா ‘பகீர்’ குற்றச்சாட்டு; போயஸ் கார்டன் இல்லத்தில் பரபரப்பு பேட்டி


தீபக், சசிகலா மீது தீபா ‘பகீர்’ குற்றச்சாட்டு; போயஸ் கார்டன் இல்லத்தில் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 9:12 PM IST)
t-max-icont-min-icon

போயஸ் கார்டன் இல்லத்தில் பேட்டி அளித்த தீபா தனது தம்பி தீபக், சசிகலா மீது பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார்.

சென்னை,

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ஆவேசமாக வெளியே வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் வழக்கமாக பேட்டி அளிக்கும்போது அமைதியாக பேசுவார். ஆனால், நேற்று ஆவேசமாக ஜெ.தீபா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

வீட்டுக்கு வர செய்து உள்ளே வைத்து அடிக்கிறார்கள். உள்ளே ராஜாம்மா (ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்தவர்) மட்டும் இருக்கிறார். அடியாட்கள் கூட்டமும் இருக்கிறது. என்னை அடித்து வெளியே தள்ளினார்கள். உள்ளே என்னுடைய தம்பி தீபக் கூப்பிட்டு சென்றான். வீடு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே யாரும் இல்லை. வீட்டை திறந்துவிட கூறினால், முடியாது என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். வீட்டின் சாவி பிரியா என்பவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த பிரியா யார் என்று தெரியவில்லை.

உள்ளே வந்த டி.வி. கேமராமேனை உள்ளே இருந்தவர்கள் அடித்தனர். நான் ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். என்னையும் அடித்து வெளியே தள்ளினார்கள். நான் இன்று இங்கே வருவதாகவே இல்லை. தீபக் தான் வரச்சொன்னான். திங்கட்கிழமை (இன்று) நான் டெல்லி சென்று சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன். பிரதமரையும் சந்திக்க இருக்கிறேன். அதற்காக நேரம் கேட்டிருக்கிறேன்.

பயமாக இருக்கிறது

தீபக் எங்களை திட்டம் போட்டு வர வைத்திருக்கிறான். அம்மா (ஜெயலலிதா) படத்திற்கு வந்து பூபோட்டுவிட்டு சென்றுவிடு. உன்னை யாரும் தடுக்க மாட்டார்கள் என்றான். நான் அவனிடம், ‘‘அங்கிருப்பவர்கள் என்னை உள்ளே விடமாட்டார்கள்’’ என்றேன். அவன் தான், ‘‘நீ வா அவர்கள் கேட்டை திறந்து உள்ளே விடுவார்கள்’’ என்றான்.

நான் எதற்காக இங்கு வரவேண்டும். அவன் (தீபக்) தான் என்னை இங்கு வர வைத்தான். காலை 5 மணியில் இருந்தே நீ வருகிறாயா என்று போன் செய்து கொண்டே இருந்தான். இப்படி ‘பிளான்’ பண்ணி வரவைத்து அடிக்கிறார்கள். சசிகலா கும்பலோடு தீபக் சேர்ந்து கொண்டு என்னை இங்கே வர வைத்து விட்டான். இங்கே பிரச்சினை ஆனவுடன், நான் தான் மாதவனை போன் செய்து வரவைத்தேன். ‘‘என்னை உள்ளே வைத்து அடிக்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது’’ என்று போன் செய்து மாதவனை வரவைத்தேன்.

வெளியே வந்தது ஏன்?

உள்ளே 4, 5 பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் யார், போலீசா? என்று கேட்டால், எதுவும் சொல்லவில்லை. நான் வரும்போது இங்கே எந்த போலீசும் கிடையாது. இப்போது இவ்வளவு போலீஸ் வந்திருக்கிறார்கள். உள்ளே அந்த ராஜாம்மா இருக்கிறார். 2 ரவுடிகள் இருக்கிறார்கள். சபாரி டிரெஸ் போட்டவங்க 2 பேர் இருக்கிறார்கள். உள்ளே வந்த கேமராமேனை அவர்கள் அடித்தனர்.

நான் மாதவனை வரச் சொன்னேன். ராஜா (தீபா பேரவை நிர்வாகி) என்னுடன் வந்ததால், அவர் மீது எதுவும் பொய் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன். தீபக் மட்டும் உள்ளே நின்று கொண்டு யாரிடமோ பேசினான். ஆனால், அவன் யாரிடம் பேசினான் என்பது எனக்கு தெரியாது.  இவ்வாறு தீபா கூறினார்.

அதனை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தீபா அளித்த பதில்களும் வருமாறு:–

ஏதாவது செய்திருப்பார்கள்

கேள்வி:– சொத்தை கைப்பற்றுவதற்காக நீங்கள் வந்ததாக சொல்கிறார்களே?.

பதில்:– தீபக் தான் என்னை இங்கே வரச்சொன்னான். நான் இங்கு இன்று வருவதாக திட்டமே கிடையாது. தீபக் தான் சசிகலா குடும்பத்தோடு சேர்ந்து கொண்டு, எல்லோரும் திட்டமிட்டு எங்களை வரவழைத்து அடிக்கிறார்கள்.

நாங்கள் இன்று வெளியே தப்பித்து வந்ததற்கு காரணமே அந்த டி.வி. கேமராமேன் தான். அவர் உள்ளே வந்ததால் தான், உள்ளே இருந்தவர்களால் எங்களை எதுவும் செய்ய முடியவில்லை. இல்லை என்றால் உள்ளேயே எங்களை ஏதாவது செய்திருப்பார்கள்.

பணத்துக்காக தீபக் இதை செய்தான்

கேள்வி:– தீபக் இங்கே உங்களை வரவைத்து இப்படி மாட்டிவிட காரணம் என்ன?.

பதில்:– தீபக் சசிகலாவின் ஆள். அம்மாவை சசிகலாவோடு, தீபக்கும் சேர்ந்துதான் கொன்றுவிட்டான். சொந்த அத்தையை, பெத்த தாய் மாதிரி இருந்தவங்களை கொன்று விட்டான். பணத்துக்காக அவர்களோடு சேர்ந்து தீபக் இதை செய்து விட்டான்.

கேள்வி:– உங்களுடைய அடுத்த நடவடிக்கை என்ன?.

பதில்:– பிரதமர் வந்து இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். இதெல்லாம் ஒரு ஆட்சியே கிடையாது. இவர்கள் எல்லாம் (சசிகலா குடும்பத்தினர்) மனிதர்களே கிடையாது. சட்டம் இவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தீபக்குக்கும் சேர்த்து தண்டனை கொடுக்க வேண்டும்.

நீங்கள் எல்லாம் மீடியாக்கள். உங்களை எப்படி அடிக்கலாம்? ஆரம்ப காலத்தில் நான் கூட மீடியாவில் தான் இருந்தேன். எப்படி அடிக்கலாம்? ஏற்கனவே கடந்த 4 நாட்களாக போலீசார் எங்களை கைது செய்ய முயற்சிக்கிறார்கள். வீட்டிற்கு வந்து நீங்கள் எப்படி பேரவை நடத்தலாம்?, எப்படி அறிக்கை விடலாம்? தினகரனுக்கு எதிராக எப்படி பேசலாம்? என்று மிரட்டுகிறார்கள். நான் எவனை பற்றி வேண்டுமானாலும் பேசுவேன். இவர்கள் யார் அதை கேட்பதற்கு?.

வழக்குப் பதிவு

கேள்வி:– திங்கட்கிழமை நீங்கள் பிரதமரை சந்திக்க செல்கிறீர்களா?.

பதில்:– ஆமாம். சந்திக்க முன் அனுமதி கேட்டிருக்கிறேன். மாதவனை கொல்ல பார்க்கிறார்கள். ராஜா மீது வழக்கு போட பார்க்கிறார்கள். முதலில் என்னை ஏமாற்றி கூப்பிட்டு வந்த தீபக் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். சசிகலா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சட்டமும், கோர்ட்டும் அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். என்னை கைது செய்ய வேண்டும் என்றால் செய்யுங்கள். ஆட்சி போனால் என்ன செய்வீர்கள்?.

கேள்வி:– உங்களை தாக்கியவர்களை அடையாளம் காட்ட முடியுமா?.

பதில்:– உள்ளே உள்ளவர்களை வெளியே அழைத்து வாருங்கள். நான் அடையாளம் காட்டுகிறேன்.

நாட்டை காப்பாற்றுங்கள்

கேள்வி:– பிரதமரிடம் என்ன கோரிக்கை வைக்கப்போகிறீர்கள்?.

பதில்:– அ.தி.மு.க.வை இந்த அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும். எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என்னுடைய தம்பியாலேயே (தீபக்) எங்களுக்கு ஆபத்து இருக்கிறது. அ.தி.மு.க. தொண்டர்களிடம் கேட்கிறேன், இந்த கட்சியை காப்பாற்றுங்கள். தமிழ்நாட்டு மக்களிடம் கேட்கிறேன், இந்த கூட்டத்திடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள். இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.

அதனை தொடர்ந்து, ஜெ.தீபாவின் அருகில் இருந்த அவரது கணவர் மாதவன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தீபா அவசரமாக கூப்பிட்டார். அதனால் வந்தேன். இங்கே ஒரே பிரச்சினை. வேறு எதுவும் எனக்கு தெரியாது’’ என்றார்.


Next Story