டெல்டா விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதி உதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


டெல்டா விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதி உதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2017 8:27 AM GMT (Updated: 12 Jun 2017 8:26 AM GMT)

மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதி உதவி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி  வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த, வேளாண் தொழிலை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடுஅரசு முனைப்புடன் அமல்படுத்தி வருகிறது.

கடந்த  ஆண்டில் கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை உரிய பங்கீட்டின்படி, தராததால், மேட்டூர்அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி அன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கமுடியவில்லை.  இதனைத் தொடர்ந்து, டெல்டா விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், நிலத்தடி நீரை பயன்படுத்தி, குறுவை சாகுபடியினை மேற்கொள்ள, ரூ.54.65 கோடி செலவில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை  அரசு செயல்படுத்தியது.  இதன் விளைவாக 3.16 இலட்சம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 1,37,314 விவசாயிகள் பயனடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து,  வழக்கமான முறையில் நாற்று விட்டு நெல் நடவு செய்ய போதுமான அளவு மேட்டூர் அணையில் நீர் இல்லாததால், நேரடி நெல் விதைப்பு முறைக்கு அதிக முக்கியத்துவம் தந்து சம்பா நெல் சாகுபடி மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ரூ.64.30 கோடி நிதி செலவில் “சம்பா சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை” அம்மா வின் அரசு செயல்படுத்தியது. இதனால்  சென்ற ஆண்டில் சம்பா பருவத்தில், 9.56 இலட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் 2,79,449 விவசாயிகள் பயனடைந்தனர்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பைவிட மிகக்குறைவாக பருவ மழை பெய்ததனால், பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வறட்சியினால் மிகவும் பாதிப்படைந்த காரணத்தினால், தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதையும் தள்ளுபடி செய்ததுடன், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் இழப்புக்கு, இடுபொருள் மானியமாக, ரூ.2247 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மேலும், தமிழக அரசு பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டங்கள் வாயிலாக பயிர் இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிட நடவடிக்கை எடுத்து வருகிறது.

2016-2017ஆம் ஆண்டில், மாண்புமிகு புரட்சித்தலைவி  அம்மா வின் அரசு, விவசாயிகளை பயிர் இழப்பிலிருந்து பாதுகாத்திட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடிவு செய்து, விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்கு பல்வேறு  முன்னேற்பாடுகளை காலத்தே மேற்கொண்டது. இதன் காரணமாக, சென்ற ஆண்டில் சுமார் 31 இலட்சத்து  85 ஆயிரம் ஏக்கரில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்த 15 இலட்சத்து 37 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டார்கள்.

விவசாயிகளுக்கு காப்பீட்டு கட்டண மானியமாக,  தமிழக அரசு  428 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.  இதனால், விவசாயிகள் தங்கள் பயிர்களின் பாதிப்பிற்கேற்ற வகையில், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,800/- முதல் ரூ.69,000/- வரை இழப்பீட்டுத் தொகை  கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  பயிர் அறுவடை பரிசோதனைகளின் அடிப்படையில், மகசூல் இழப்பீடு கணக்கிடப்பட்டு, விவசாயிகளுக்கு  இழப்பீட்டுத் தொகை பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களால் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை துரிதமாக வழங்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.  தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியின் காரணமாகவே, தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 2015-16 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையிலிருந்த ரூ.403.79 கோடி இழப்பீட்டுத் தொகை, 2.96 இலட்சம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் 2017 மே மாதம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

2017-18 ஆம் ஆண்டிலும், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சுமார் 51 இலட்சத்து 38 ஆயிரம் ஏக்கரில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் 24 இலட்சம்  விவசாயிகளைப் பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதற்காக தமிழ்நாடு அரசு காப்பீட்டு மானியத் தொகையாக ரூ.522.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர்  ஆர். துரைக்கண்ணு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி. கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  க. சண்முகம், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர், ககன்தீப்சிங் பேடி, வேளாண்மைத் துறை இயக்குநர், தட்சிணாமூர்த்தி,  மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மேட்டூர் அணையின் தற்போதைய நீர் மட்ட அளவு, கர்நாடக மாநிலத்திலிருந்து பெறப்படவேண்டிய தண்ணீர் குறித்தும், தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை மேற்கொள்வது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

காவேரி டெல்டா பகுதியின் பயிர் சாகுபடியானது மேட்டூர் அணையில் இருந்து பெறப்படும் காவேரி ஆற்றின் நீர் பாசனத்தினைச் சார்ந்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  நீரின் அளவு 90 அடி இருக்கும்போது, குறுவை நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ஆம் தேதி அணை திறக்கப்படும். தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் இயல்பான அளவு பெறப்படும் பட்சத்தில் மேட்டூர் அணையில் இருந்து கிடைக்கப் பெறும் பாசன நீரின் மூலம்,  இயல்பான குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும்.  உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கடந்த ஆண்டு கர்நாடகா விகிதாச்சார முறைப்படி பாசனத்திற்கு போதுமான தண்ணீர் திறந்து விடாததால் காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடியும், சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தற்போது மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியில்,  நீர்மட்டம் 23.68 அடியாக மட்டுமே உள்ளது. தற்போதுள்ள நீரைக் கொண்டு,  குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறந்துவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவாக, டெல்டா பகுதியில் குறுவை பருவத்தில் கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்  மற்ற ஆறு மாவட்டங்களில் நெற்பயிர் சுமார் 3.15 இலட்சம் ஏக்கரிலும், பயறு வகைப் பயிர்கள் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் முடிய சுமார் 30,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகிறது.  கால்வாய் பாசனம் இல்லாத காலங்களில் இதர நீர் ஆதாரங்களான வடிமுனைக் குழாய் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலிருந்து பெறப்படும் நீரினைக் கொண்டு டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி நடைபெறும். தண்ணீரை மிகவும் சிக்கனமாகவும், திறமையாகவும் கையாள்வதற்கு ஏதுவாக, நெற்பயிருக்கு மாற்றாக, மாற்று பயிர் சாகுபடி முறையான பயறு வகை சாகுபடியை ஊக்குவிப்பது  மிகவும் அவசியமாகிறது.  

தற்போது நிலவுகின்ற சூழ்நிலையில், குறுவை விவசாயிகளின் நலனை பாதுகாத்திட, கீழ்க்கண்ட அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.கடந்த ஐந்தாண்டுகளில் வழங்கியது போல், டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். நெல் பயிர் சாகுபடி தற்போதுள்ள நீர் ஆதாரங்களைக் கொண்டு குறுவை பருவத்தில் 1.60 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு மாற்றாக பயறு வகை பயிர்கள் சாகுபடி 1.32 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும்.    

நெல் நடவினை குறித்த காலத்தில் மேற்கொள்ளவும், களை எடுப்பதை எளிமையாக்கும் வகையிலும் நடவு இயந்திரங்களை கொண்டு நெல் நடவு செய்ய ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4000/- வீதமும், நிலத்தின் தன்மையை மேம்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் ஜிங்க் சல்பேட் மற்றும் உயிர் உரங்கள் ஏக்கருக்கு ரூ.520/- வீதமும்,  நுண்ணுலீட்ட உரங்கள் ஏக்கருக்கு ரூ.200/- வீதமும்,  100 ரூ மானியமாக வழங்கப்படும்.

டெல்டா பகுதி விவசாயிகளிடையே பயறு வகைப் பயிர்களின் சாகுபடியினை ஊக்கப்படுத்தும் வகையில் பயறுவகை சாகுபடிக்குத் தேவையான, தரமான பயறுவகை விதைகள் ஏக்கருக்கு ரூ. 960/- வீதமும்,  மகசூலை அதிகரிக்க இலைவழி டிஏபி உரமிட மற்றும் உயிர் உரங்கள் விநியோகிக்க ஏக்கருக்கு ரூ. 640/- வீதமும்  100 ரூ மானியமாக வழங்கப்படும்.
இது தவிர பருவமழையினை முழுமையாக பயன்படுத்தி குறுவை சாகுபடியினை உடனே தொடங்கும் பொருட்டு உழவுப் பணிகளை மேற்கொள்ள ஏக்கருக்கு  ரூ.500/- என்ற அளவில் மானியத் தொகையும், டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுவை சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில் 110 மில்லி மீட்டர் விட்டம் மற்றும்
6 மீட்டர் நீளம் கொண்ட குழாய்கள் 30 எண்கள் கொண்ட 1300 அலகுகள், அலகு ஒன்றுக்கு ரூ. 21,000/- வீதமும் மானியம் வழங்கப்படும்.  

காவேரி டெல்டா மற்றும் கல்லணை பகுதியின் கடைமடைப் பகுதியான வெண்ணாறு பகுதியின் மண் வளத்தினை அதிகரிக்கும் வகையில் பசுந்தாள் உர பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏக்கர் ஒன்றிற்கு ரூ.1200/- வீதமும் 100ரூ மானியம் வழங்கப்படும்.

டெல்டா பகுதிகளில் வடிமுனைக் குழாய் மற்றும் ஆழ்துளை குழாய் ஆகியவற்றின் நீர் ஆதாரத்தினைக் கொண்டு குறுவை சாகுபடி இயல்பான பரப்பில் மேற்கொள்ளவும், குறைந்த நீர் ஆதாரத்தைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் பயிர் சாகுபடி செய்ய, பயறு வகை பயிர் சாகுபடியினை மாற்று பயிர் சாகுபடியாக ஊக்கப்படுத்தவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் அறிவிக்கப்படும்  இந்த குறுவைத் தொகுப்பு திட்டம்,  நடப்பாண்டில் 56 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

அம்மா வழியில் செயல்படும் எனது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், நிலத்தடி நீர் மூலம் குறுவை நெல் மற்றும் பயறு சாகுபடி மேற்கொள்ளவும், உயர் மகசூல் பெறவும், மண்வளம் மேம்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இப்பணிகளை உடனடியாக துவங்க நான் வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.


Next Story