ஓ.பன்னீர்செல்வம் கட்சி இணைப்பு பேச்சுவார்த்தைக்கு மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது
ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து, கட்சி இணைப்பு பேச்சுவார்த்தைக்கு மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
சென்னை செனாய் நகரில் நேற்று காலை குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
1½ கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கம் உடைந்துவிடக்கூடாது, இரட்டை இலை சின்னம் முடங்கிவிடக்கூடாது, ஜெயலலிதாவின் ஆட்சி 2021–ல் ஆண்டு மட்டுமல்ல, என்றென்றும் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் தான் இன்றைக்கு ஜெயலலிதாவின் அரசை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வழிநடத்தி கொண்டிருக்கிறோம்.
எனவே, இப்படிப்பட்ட நிலையில் கட்சி பிளவுபடக்கூடாது என்ற அடிப்படையில் தான், பிரிந்துசென்ற சகோதரர்கள் திரும்பி வர வேண்டும் என்கின்ற கண்ணோட்டத்துடன் தான், கதவுகள் திறந்துவைக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் வர வேண்டும், பேச வேண்டும், அதன் மூலம் இந்த இயக்கம் வலுப்பட வேண்டும், ஜெயலலிதாவின் ஆட்சி இந்த மண்ணிலே என்றைக்கும் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் தான் இன்றும் நாங்கள் உள்ளோம்.
அவர்கள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்து, பேச்சுவார்த்தை கதவுகள் திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இயக்கத்தின் நலன் கருதி 1½ கோடி தொண்டர்களை கட்டிக்காக்க வேண்டும் என்ற நிலை கருதி, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற உணர்வோடு, அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– நேற்று மதுரையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கட்சிக்குள் நிறைய கிரிமினல்கள் வந்துவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் கிரிமினல் என்று யாரை சொல்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?.பதில்:– நான் நேற்று ஜி.எஸ்.டி. கூட்டத்தில் இருந்தேன். அவர் என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் சொல்லித்தான் தெரியும். அதுகுறித்து அவரிடம் தான் நீங்கள் கருத்து கேட்க வேண்டும்.
கேள்வி:– போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்த தீபா, இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். சசிகலாவுடன் தீபக்கும் சேர்ந்து தான் ஜெயலலிதாவை கொன்றுவிட்டார் என்று கூறியிருக்கிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?.
பதில்:– ஜெயலலிதாவின் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. நிலையான ஆட்சி, உறுதியான ஆட்சி, என்றென்றும் தமிழ்நாட்டில் தொடருகின்ற ஆட்சி தான் ஜெயலலிதாவின் ஆட்சி. எனவே, அது மு.க.ஸ்டாலினாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அந்த கனவு என்பது பலிக்கவே பலிக்காது. எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.
கேள்வி:– போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று தாக்குதலுக்கு உள்ளான நிருபர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?.பதில்:– நேற்றைய தினம் நான் சென்னையில் இல்லை. ஜி.எஸ்.டி. கூட்டத்தில் இருந்த காரணத்தால், முழுமையான அளவுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. காலையில் கூட, நான் வீட்டில் இருந்து புறப்படும்போது சில நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். எனவே, அதுபற்றி முழுமையாக தெரிந்த பிறகுதான் சொல்ல முடியும்.
கேள்வி:– சசிகலா, தினகரனை கட்சியைவிட்டு நீக்கினால்தான் இணைப்புக்கான சாத்தியம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக எடுத்துக்கொள்ளலாமா?.
பதில்:– ஏற்கனவே நான் சொல்லியது போல, எங்களை பொறுத்த அளவில் தெளிவாகவே இருக்கிறோம். ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில் இருக்கிறோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.