தீயில் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் முகப்பு பகுதியை எச்சரிக்கையுடன் இடிக்க திட்டம்


தீயில் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் முகப்பு பகுதியை எச்சரிக்கையுடன் இடிக்க திட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2017 3:45 AM IST (Updated: 12 Jun 2017 8:22 PM IST)
t-max-icont-min-icon

தீயில் சிக்கி உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் முகப்பு பகுதியை எச்சரிக்கையுடன் இடிக்க திட்டமிட்டுள்ளதாக பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த மாதம் 31–ந்தேதி தீ விபத்துக்குள்ளானது. இந்த தீ விபத்தில் கட்டிடம் முழுவதும் தீயில் சிக்கி உருக்குலைந்தது. இதனால் கட்டிடம் கீழே விழுந்தால் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை இடிக்க அரசு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து ஜா கட்டர் எந்திரம் மூலம் கட்டிடம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த 10–ந்தேதி ஜா கட்டர் எந்திரம் சரிந்து விழுந்து அதன் டிரைவர் சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் காரணமாக கடந்த 2 நாட்களாக கட்டிடம் இடிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இடிபாட்டு கழிவுகளை சமன் செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி 2 நாட்களில் முடிவடையும் என்று அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலையிலே கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின.

இதுகுறித்து கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் கூறும்போது:–

தற்போது கட்டிடத்தின் பின் பகுதி முழுவதும் இடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள முன்பகுதியை இடிக்கும் போது எதிரே உள்ள உஸ்மான் சாலை பாலத்தின் மீதும், அருகில் உள்ள கடைகள் மீது விழாமல் இருக்க சல்லடை வேலி அமைத்து எச்சரிக்கையுடன் இடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த கட்டிடத்தை இடிக்கும் பணியை விரைவில் நாங்கள் முடித்துவிடுவோம்.

இடிப்பு பணியின் போது கடந்த 10–ந்தேதி ஏற்பட்ட விபத்து எங்களை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. அதேபோல் இனிமேல் நிகழ்ந்து விட கூடாது என்பதற்காக எச்சரிக்கையுடன் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த கட்டிடத்தை சுற்றி வணிக வளாகங்களும், குடியிருப்பு பகுதிகளும் இருப்பதால் தான் தற்போது கட்டிடத்தை இடிக்க கால தாமதமாகி உள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story