இலங்கையில் 8 திருவள்ளுவர் சிலைகள் வி.ஜி.சந்தோ‌ஷம் தகவல்


இலங்கையில் 8 திருவள்ளுவர் சிலைகள் வி.ஜி.சந்தோ‌ஷம் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2017 6:00 AM IST (Updated: 13 Jun 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளுவரின் பெருமையை எடுத்து கூறுவதற்காக இலங்கையில் 8 திருவள்ளுவர் சிலைகளை வி.ஜி.சந்தோ‌ஷம் திறந்து வைக்கிறார்.

சென்னை,

வி.ஜி.பி.குழுமத்தின் நிறுவனரும், வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவருமான வி.ஜி.சந்தோ‌ஷம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கையில் திருவள்ளுவர் சிலை

வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கத்தின் சார்பாக, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு திருவள்ளுவரின் பெருமையை எடுத்துக் கூறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் வாழும் மக்களிடம் திருவள்ளுவரின் பெருமையை எடுத்துக் கூறுவதற்காக 6½ அடி உயரம் 5½ அடி அகலத்தில் 16 திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 4 சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 8 சிலைகள் தமிழ் மக்கள் அதிகம் வாழும் இடங்களான புத்தளம், மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி, சாவகச்சேரி மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் வரும் 15–ந்தேதியில் இருந்து 23–ந்தேதி வரை அந்தந்த பகுதிகளில் திறக்கப்படுகிறது. இதனையொட்டி திருக்குறள் விழாவும் நடத்தப்படுகிறது. அந்த விழாவில் நான் (வி.ஜி.சந்தோ‌ஷம்) கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைக்கிறேன். மீதம் உள்ள 4 சிலைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

திருக்குறள் ஆய்வரங்கம்

இவ்விழாவின் போது திருக்குறள் ஆய்வரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், மா.பொ.சி.யின் மகள் ம.பொ.சி.மாதவி பாஸ்கரன், புலவர் வெ.சேகர், பேராசிரியர் உலகநாயகி உள்ளிட்ட 29 பேர் உடன் வருகின்றனர்.

இந்த குழுவில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை மந்திரி

விழா ஏற்பாடுகளை இலங்கை ராஜாங்க கல்வி மந்திரி வி.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் இலங்கை தமிழ்க் கல்வி மேம்பாட்டுச் சங்கங்கள் மற்றும் இலங்கை பயணத்துக்கான ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஆகியோர் செய்து வருகின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

உடன் இலங்கை ராஜாங்க கல்வி மந்திரி வி.எஸ்.ராதாகிருஷ்ணன், இலங்கை பயண ஒருங்கிணைப்பாளர் சச்சிதானந்தம், ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், தொழிலதிபர் பிரசிடெண்ட் அபுபக்கர், வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க இணைசெயலாளர் வி.ஜி.பி.ராஜாதாஸ் ஆகியோர் இருந்தனர்.


Next Story