முதல்-அமைச்சர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை டி.டி.வி.தினகரன் சொல்கிறார்
முதல்-அமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் நான் இல்லை. கட்சியை ஒன்றிணைத்து சிறந்த அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் நான் செயல்பட்டு வருகிறேன் என டி.டி.வி.தினகரன் சொல்கிறார்.
சென்னை,
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
என்னுடன் பல அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் நேரிலும் டெலிபோன் மூலமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் ஏதோ பயத்தில் உள்ளனர். எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து என்னை சந்திப்பார்கள் என்று கருதுகிறேன்.
முதல்-அமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் நான் இல்லை. கட்சியை ஒன்றிணைத்து சிறந்த அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் நான் செயல்பட்டு வருகிறேன். முதல்-அமைச்சர் பதவி மீது எனக்கு ஆசை இருந்திருந்தால் எடப் பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் சசி கலா முதல்-அமைச்சராக நியமித்த போதே நான் அந்த பதவிக்கு வந்திருக்கலாம்.
முதல்-அமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என்பது எனது எண்ணம் அல்ல. அந்த இடம் ஜெய லலிதா என்ற சிங்கம் அமர்ந்திருந்த இடம். அவருக்கு இணையாக எனது குடும்பத்தில் யாரும் இல்லை. நாம் அவரை கடவுளாக மட்டுமே வணங்க முடியும். அவரது இடத்தை கட்சியிலோ, ஆட்சியிலோ நிரப்ப முடியாது. நாங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகத்தான் இருப்போமே தவிர, அதை அழிக்கும் பணியை ஒருபோதும் செய்ய மாட்டோம்.
இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெறுவதற்கு சுகேஷ் சந்திர சேகர் போன்றவர்கள் எனக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story