எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி லஞ்சம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் தி.மு.க. முறையீடு


எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி லஞ்சம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் தி.மு.க. முறையீடு
x
தினத்தந்தி 13 Jun 2017 10:45 PM GMT (Updated: 13 Jun 2017 7:11 PM GMT)

நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தரப்பு மூத்த வக்கீல் முறையீடு செய்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின்போது, சட்டசபையில் அமளி ஏற்பட்டது. தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. அவர் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சட்டசபையில் இருந்து குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

இதன்பின்னர் நடந்த ஓட்டெடுப்பில், நம்பிக்கை தீர்மானம் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மு.க.ஸ்டாலின், வழக்கறிஞர் சமூக நீதிபேரவையின் தலைவர் கே.பாலு உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

ஓட்டுக்கு பணம்

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டசபை செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வருகிற ஜூலை 11-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், இந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போடுவதற்கு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூறியதாக, ‘டைம்ஸ் நவ்’ என்ற ஆங்கில தொலைக் காட்சி நேற்று முன்தினம் செய்தியாக வெளியிட்டது.

இந்த நிலையில், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.

அவசர வழக்கு

அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பு மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றிபெற்றதாக அறிவித்ததை எதிர்த்து ஏற்கனவே என் கட்சிக்காரர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இந்த ஐகோர்ட்டில் வருகிற ஜூலை 11-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஆனால், நேற்று தனியார் தொலைக்காட்சி இந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.10 கோடி வரை கொடுத்ததாக ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூடுதல் மனுவை தாக்கல் செய்ய உள்ளேன். இந்த மனுவுடன், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

கூட்டத்தொடர்

அதற்கு நீதிபதிகள், ‘கூடுதல் மனுவை தாக்கல் செய்யுங்கள். அந்த மனுவை, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுடன் வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்றனர். அதற்கு மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், ‘தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நாளை (இன்று) தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘நாளை சட்டசபை கூடட்டும். வழக்கை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறோம்’ என்று கூறினர். 

Next Story