விவசாயிகள் வங்கி கடனை தள்ளுபடி செய்வதற்கு மாநில அரசுகளின் நிதி சுமையை ஏற்க வேண்டும் மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்


விவசாயிகள் வங்கி கடனை தள்ளுபடி செய்வதற்கு மாநில அரசுகளின் நிதி சுமையை ஏற்க வேண்டும் மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Jun 2017 11:19 PM IST (Updated: 14 Jun 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாநில அரசுகளின் நிதி சுமைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வங்கிகளின் வாராக் கடன் குறித்து வங்கி தலைவர்களுடன் ஜூன் 12–ம் தேதி ஆலோசனை நடத்திய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘‘விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு நிதி உதவி அளிக்காது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

விவசாயக் கடன் தள்ளுபடி கோரிக்கையை முன்வைத்து மராட்டியம் மற்றும் மத்தியப் பிரதேச மாநில விவசாயிகள் கடந்த 10 நாட்களாக போராடி வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகளின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு உதவ முடியாது என்று கை விரித்து விட்டது நியாயமானது அல்ல.

ஏற்க முடியாது

தொழில் அதிபர்களும், பெரு நிறுவனங்களும் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை வசூலிக்க முடியாததால், மத்திய அரசு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்கி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏமாற்றிவிட்டு, வெளிநாடு சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் வங்கிக் கடனை வசூலிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறுவதும், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு உதவிட முடியாது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்து இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாநிலங்களின் நிதிச் சுமைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.


Next Story