தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மாணவர் அமைப்பினர் முற்றுகை போராட்டம்


தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மாணவர் அமைப்பினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 2:30 AM IST (Updated: 16 Jun 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து டி.பி.ஐ. வளாகத்தை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சென்னை

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து டி.பி.ஐ. வளாகத்தை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்

இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி அதிகாரிகள் அலுவலகமான டி.பி.ஐ. வளாகம் முன்பு முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் உச்சினிமாகாளி முன்னிலை வகித்தார்.

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடிப்படை வசதிகள்

முன்னதாக மாணவர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் காலையிலும் உணவு வழங்கி பிளஸ்-2 வரை நீடிக்க வேண்டும். பாடத்திட்டத்தை அறிவியல் பூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும்.

‘நீட்’ தேர்வு

தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஜனாதிபதி கையெழுத்து பெற, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். கல்வி உதவித்தொகையை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story