ரகசியமாக பெங்களூரு வந்தார் சிறையில் சுதாகரனுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு


ரகசியமாக பெங்களூரு வந்தார் சிறையில் சுதாகரனுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 4:55 AM IST (Updated: 16 Jun 2017 4:54 AM IST)
t-max-icont-min-icon

ரகசியமாக நேற்று பெங்களூரு வந்த டி.டி.வி. தினகரன், பரப்பன அக்ரஹாரா சிறையில் சுதாகரனை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் உடல் நலம் விசாரித்தார்.

பெங்களூரு,

ரகசியமாக நேற்று பெங்களூரு வந்த டி.டி.வி. தினகரன், பரப்பன அக்ரஹாரா சிறையில் சுதாகரனை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் உடல் நலம் விசாரித்தார்.

சசிகலாவுடன் சந்திப்பு

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சசிகலாவை அ.தி.மு.க.(அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 5–ந் தேதி சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேசினார்.

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி.தினரகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘60 நாட்கள் பொறுமை காக்குமாறு சசிகலா அறிவுறுத்தியுள்ளார்‘ என்றார். மேலும் அவர் இனிமேல் கட்சி பணிகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சென்னை சென்ற அவரை எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தற்போது அவருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அவர் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான ஆயத்த பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

சுதாகரனுடன் சந்திப்பு

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருடைய சகோதரர் சுதாகரனை டி.டி.வி.தினகரன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். மாலை 4.15 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர் மாலை 4.55 மணியளவில் வெளியே வந்தார். சுமார் 40 நிமிடங்கள் சுதாகரனுடன் அவர் பேசினார். அப்போது சுதாகரனிடம் அவர் உடல் நலம் விசாரித்தார். பின்னர் அவர் தமிழகத்திற்கு புறப்பட்டு சென்றார்.

டி.டி.வி.தினகரனுடன் டாக்டர் வெங்கடேஷ், கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் வா.புகழேந்தி ஆகியோர் இருந்தனர். இதுகுறித்து வா.புகழேந்தி கூறுகையில், “கடந்த 5–ந் தேதி வந்தபோது சுதாகரனை அவரால் சந்திக்க முடியவில்லை. அதனால் இன்று(அதாவது நேற்று) சிறையில் சுதாகரனை சந்தித்து டி.டி.வி.தினகரன் நலம் விசாரித்தார். இந்த வி‌ஷயம் திடீரென முடிவானதால் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. சசிகலாவை அவர் சந்திக்கவில்லை. இன்னொரு நாள் அவர் வந்து சசிகலாவை மீண்டும் சந்திப்பார் என்று கூறினார்.

ரகசியமாக...

கடந்த முறை அவர் சசிகலாவை சந்திக்க வந்தபோது, சிறை முன் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று டி.டி.வி.தினகரன் வருகை குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததால், பத்திரிகையாளர்கள் யாரும் சிறை பகுதிக்கு வரவில்லை.


Next Story