சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. வெளிநடப்பு சி.டி. ஆதாரத்தை காட்டி மு.க.ஸ்டாலின் பேட்டி


சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. வெளிநடப்பு சி.டி. ஆதாரத்தை காட்டி மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2017 11:00 PM GMT (Updated: 16 Jun 2017 7:33 PM GMT)

மு.க.ஸ்டாலின் மீண்டும் பேச முயற்சித்த போது, சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை,

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் குதிரை பேரம் குறித்து, மு.க.ஸ்டாலின் மீண்டும் பேச முயற்சித்த போது, சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், சி.டி. ஆதாரத்தை காட்டி மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

தி.மு.க. வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, அவர் சட்டசபையில் கடந்த 2 நாட்களாக தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சினையை மீண்டும் எழுப்பினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடந்ததாக கூறி, அதற்கான சி.டி. ஆதாரத்தை வெளியிட்டு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபாநாயகர் அனுமதி மறுப்பு

குதிரை பேரம் நடைபெற்று ஆட்சியில் இருக்கக்கூடிய, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்கும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி, இதே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்படி நடந்தபோது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பல கோடி ரூபாய் பரிமாறப்பட்டது என, ‘டைம்ஸ் நவ்’ எனும் ஆங்கில தொலைக்காட்சியில் ஆதாரங்களோடு செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

எனவே, இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடந்த 2 நாட்களாக நேரமில்லா நேரத்தில் நான் பிரச்சினையை எழுப்பியபோது, சபாநாயகர் அதற்கு சர்வாதிகார போக்குடன் அனுமதி தர மறுத்தார். நேற்றைய தினம் அதனைக் கண்டிக்கும் வகையில், நாங்கள் வெளிநடப்பு செய்தபிறகு, ‘எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவையில் பேசக்கூடாது, என்னிடத்தில் ஆதாரத்தை கொடுத்து விட்டுத்தான் பேச வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் சபாநாயகர் பேசியிருக்கிறார்.

ஆதாரம் உள்ளது

ஆகவே, இன்று 3-வது நாளாக நான் இந்தப் பிரச்சினையை எழுப்புகிறபோது, அவர் சொன்னபடியே ஆதாரத்தைக் கையிலே வைத்திருக்கிறேன். ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி வெளியிட்ட ஆதாரத்தை கொண்ட சி.டி. தான் என் கையில் இருக்கிறது. எனவே, “இதை நான் சபையில் தருவதற்கு தயாராக இருக்கிறேன், நீங்கள் அதை அனுமதிக்கிறீர்களா?. இல்லையெனில், தங்களுடைய அறையில் வந்து தருகிறேன். அதன்பிறகு, இதுகுறித்து நாளை சபையிலே விவாதிக்க அனுமதி தருகிறீர்களா?” என்று கேட்டேன்.

உடனே, “அதெல்லாம் முடியாது, இப்படி எல்லாம் என்னிடம் திடீர்.. திடீர்.. என்று பேசக்கூடாது, இதெல்லாம் சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது” என்று சபாநாயகர் உத்தரவிடுகிறார்.

நேற்று அவர் சொன்ன அடிப்படையில் தான், இன்றைக்கு நான் ஆதாரத்தோடு வந்தேன். ஆனால், இன்றைக்கு அந்த ஆதாரத்தை கையில் வைத்திருக்கிறபோது அதைப்பற்றி பேசக்கூடாது, சபைக்குறிப்பில் இது இடம்பெறாது என்று தீர்ப்பு தருகிறார் என்றால், இதற்குப் பிறகு சட்டமன்றத்தில் எப்படி நாங்கள் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியும்?. ஆகவே, அதை கண்டித்து தி.மு.க. வெளிநடப்பு செய்திருக்கிறது.

மிகப்பெரிய அவமானம்

இதில் இருந்து தெளிவாக தெரிவது என்னவென்றால், ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் வந்த செய்தி நூற்றுக்கு நூறு உண்மை. ஆகவே, பல கோடி ரூபாய் கைமாறி, குதிரை பேரம் நடைபெற்று, அந்த அடிப்படையில் தான் இப்போது எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.வின் பினாமி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம், மிகப்பெரிய தலைகுனிவு என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். 

Next Story