டிசம்பர் 12-ந் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சியா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு


டிசம்பர் 12-ந் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சியா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Jun 2017 12:00 AM GMT (Updated: 16 Jun 2017 7:42 PM GMT)

“ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை,

“ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. கட்சி பெயர், கொடி, சின்னம் போன்றவை அப்போது அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் சூசகம்

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தபோது, “சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள்” என்று சூசகமாக அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாகி எதிர்ப்பு, ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன. அரசியலுக்கு வந்தால் அவரால் தாக்குப்பிடிக்க முடியுமா? என்ற விவாதங்களும் நடந்து வருகின்றன.

ரஜினிகாந்த், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று நெருக்கமான நண்பர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரிடம் தொடர்ந்து கருத்து கேட்டு வருகிறார். அரசியல் கட்சிகளில் இருக்கும் நண்பர்களிடமும் ஆலோசனைகள் நடத்துகிறார்.

ஆலோசனைகள்

காலா படப்பிடிப்புக்காக மும்பையில் இரண்டு வாரங்கள் முகாமிட்டு இருந்தபோது கட்சி நடத்தும் நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் பதவி வகிக்கும் வட இந்திய நடிகர்கள் ஆகியோரிடமும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. பலரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவான கருத்துக்களை கூறி உள்ளனர்.

ஜெயலலிதா மரணம், வயது முதுமையால் கருணாநிதி அரசியல் பணிகளில் ஈடுபடாதது போன்றவை தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றனர்.

இறுதி வடிவம்

காலா படப்பிடிப்பை ஓரிரு மாதங்களில் முடித்து விட ரஜினிகாந்த் திட்டமிட்டு இருக்கிறார். அடுத்த மாதம் விடுபட்ட ரசிகர்களை மீண்டும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார். ஆகஸ்டு மாதத்தில் இருந்து அரசியலுக்கு வரும் முடிவுக்கு அவர் இறுதி வடிவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1975-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அபூர்வராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார். கேட்டை திறந்து கொண்டு வருவது போன்ற முதல் காட்சி அன்றுதான் படமாக்கப்பட்டது. அதுபோல் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிறந்த நாளில் புது கட்சி

ஆனால் ‘2.0’, ‘காலா’ படங்களை திரைக்கு கொண்டு வரும் பணிகள் இருப்பதால் அந்த முடிவை தள்ளிவைத்து தனது பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி ரசிகர்கள் மாநாட்டை நடத்தி அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சி பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை அன்றைய தினம் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.


Next Story