பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் கல்வீசி தாக்குதல் முதல்வர் காயம்-கார் கண்ணாடி உடைப்பு; 12 பேர் கைது


பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் கல்வீசி தாக்குதல் முதல்வர் காயம்-கார் கண்ணாடி உடைப்பு; 12 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2017 11:00 PM GMT (Updated: 16 Jun 2017 9:04 PM GMT)

சென்னையில் நேற்று கல்லூரி மாணவர்கள் போலீஸ் தடையை மீறி பஸ் தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் முதல்வர் காயம் அடைந்தார்.

சென்னை,

சென்னையில் நேற்று கல்லூரி மாணவர்கள் போலீஸ் தடையை மீறி பஸ் தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் முதல்வர் காயம் அடைந்தார். இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரிகள் திறந்தன

கோடை விடுமுறை முடிந்து சென்னையில் நேற்று கல்லூரிகள் திறந்தன. மாணவ-மாணவிகள் உற்சாகத்தோடு கல்லூரிக்குச் சென்றனர். சென்னையில் பஸ் தினம் கொண்டாட தடை அமலில் உள்ளது. தடையை மீறி நேற்று முதல் நாளே சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்களும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பஸ் தினத்தை கொண்டாடினார்கள்.

மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமான பேர் சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் கூடி அந்த வழியாக வந்த அண்ணாசதுக்கம் செல்லும் மாநகர பஸ்சை மறித்து ஏறினார்கள். சிலர் பஸ்சின் கூரை மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். பஸ் மெதுவாக வர, ஒருசில மாணவர்கள் மேளதாளத்தோடு பஸ்சின் முன்பக்கம் பாட்டுப்பாடி ஆடியபடி வந்தனர்.

போலீசார் விரைந்தனர்

இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். போலீஸ் படையை பார்த்ததும் மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஒருசில மாணவர்கள் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 4 பேரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். மற்ற மாணவர்கள் அமைதியாக கல்லூரிக்குள் சென்றனர். மாநில கல்லூரி முன்பு போலீஸ் காவல் போடப்பட்டது.

பச்சையப்பன் கல்லூரி

இதேபோல நேற்று காலை கீழ்ப்பாக்கம் பகுதியில் 3 பஸ்களில் ஏறி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 3 பஸ்களும் மெதுவாக சென்றதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்களின் கண்ணாடிகளை அடித்துக்கொண்டே மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டார்கள்.

அப்போது கற்களும் பறந்துவந்தன. தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் சிதறி ஓடினார்கள். இதில் ஒரு பிரிவினர் கல்லூரிக்குள் ஓடினர். கல்லூரி வளாகத்திலும் மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து பச்சையப்பா சிலைக்கு மாலை போடுவதற்காக வந்தனர்.

கல்வீசி தாக்குதல்

அப்போது கல்லூரி முதல்வர் காளிராஜ், பேராசிரியர்கள் கணேசன், கமலக்கண்ணன் ஆகியோர் அடையாள அட்டை இருக்கும் மாணவர்கள் மட்டும் கல்லூரிக்குள் வரவேண்டும் என்று கூறினார்கள். இதில் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த வெளியாட்களுக்கும், முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வரை மதிக்காமல் கல்லூரிக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த வெளியாட்கள் சிதறி கற்கள், தென்னைமட்டை ஆகியவற்றை எடுத்து போலீசார், பேராசிரியர்கள் மீது வீசினார்கள். இதில் கல்லூரி முதல்வர் காளிராஜூக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. கல்லூரி முதல்வர் காளிராஜ் கார் மீது கற்கள் வீசப்பட்டதில் பின்புற கண்ணாடி உடைந்தது.

12 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கல்லூரி முதல்வர் காளிராஜ் புகார் தெரிவித்தார். கல்லூரி நிர்வாகம், இந்த தாக்குதல் சம்பவத்தில் மூலக்காரணமாக இருந்ததாக 12 பேர் பட்டியலை போலீசாரிடம் கொடுத்தது. கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 12 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சையப்பன் கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் பேராசிரியர் என்.சேட்டு கூறும்போது, “கல்வீசி தகராறு செய்து பிடிபட்டவர்களில் மாணவர்கள் யாராவது ஈடுபட்டு இருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரியில் 62 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. தேவைப்படும் பட்சத்தில் அதில் பதிவான காட்சிகளை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

போலீஸ் எச்சரிக்கை

சென்னை நகரில் எக்காரணத்தை கொண்டும் பஸ் தினம் கொண்டாட அனுமதிக்க முடியாது. தடையை மீறி பஸ் தினம் கொண்டாடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story