குடிபோதையில் டிரைவர் காரை ஓட்டியதால் விபத்து; 4 பேர் படுகாயம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டின் சுவரில் மோதி நின்றது


குடிபோதையில் டிரைவர் காரை ஓட்டியதால் விபத்து; 4 பேர் படுகாயம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டின் சுவரில் மோதி நின்றது
x
தினத்தந்தி 17 Jun 2017 3:15 AM IST (Updated: 17 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அடையாறு டி.ஜி.எஸ். சாலையில் டிரைவர் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை,

சென்னை அடையாறு டி.ஜி.எஸ். சாலையில் டிரைவர் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டின் சுவர் மீது கார் மோதி நின்றது.

தாறுமாறாக ஓடிய கார்

நேபாளத்தை சேர்ந்த பெஞ்சமின்(வயது 28), அமீத்(30), ராபீன்(19), கார்கின்(20) ஆகிய 4 பேரும் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு பணியை முடித்துவிட்டு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்கள் அறைக்கு செல்ல டி.ஜி.எஸ். சாலை நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மெரினாவில் இருந்து அடையாறு நோக்கி தாறுமாறாக வந்த ஒரு கால் டாக்ஸி நடைபாதையில் சென்று கொண்டிருந்த வாலிபர்கள் மீது மோதி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அமீத்துக்கு 2 கால்களும் முறிந்தன.

மது அருந்திவிட்டு...

உடனே தகவல் அறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மற்றும் அவருடன் வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திரா நகரை சேர்ந்த அய்யப்பன்(35), அவரது மைத்துனர் ராஜா(28) என்பது தெரியவந்தது. மெரினா கடற்கரையில் மது அருந்திவிட்டு அடையாறில் உள்ள அவர்களது நண்பர் வீட்டிற்கு சென்றபோது விபத்து நடந்ததும் தெரியவந்தது.

நேரில் ஆய்வு

போலீசார் 2 பேர் மீதும் மது போதையில் வாகனம் ஓட்டியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களது காரையும் பறிமுதல் செய்தனர்.

விபத்து நடந்த பகுதி தலைமை நீதிபதி குடியிருப்பு என்பதால் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.


Next Story