கோவை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு


கோவை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 17 Jun 2017 12:03 PM IST (Updated: 17 Jun 2017 12:03 PM IST)
t-max-icont-min-icon

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

கோவை,

கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது.  இங்கு கிளை செயலாளர் ஆனந்தன் (வயது 50) என்பவர் கட்சி அலுவலகத்திலேயே தங்கியிருந்து பராமரித்து வந்தார். மேலும் கட்சிக்கு சொந்தமான காரின் டிரைவராகவும் இருந்து வருகிறார்.

இன்று காலை 6 மணிக்கு ஆனந்தன்,  கட்சி அலுவலகத்தை பூட்டி விட்டு வழக்கம் போல் எழுந்து வாக்கிங் சென்றார்.பின்னர் அரை மணி நேரம் கழித்து கட்சி அலுவலகத்துக்கு அவர் வந்தார்.

அப்போது அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பகுதியில் ’குபு குபு’ வென தீப்பிடித்து எரிந்ததை கண்டு அவர் திடுக்கிட்டார். உடனே அவர் சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் ஆனந்தன் கட்சி அலுவலகத்திற்குள் சென்று பார்த்த போது, ஒரு பீர்பாட்டிலில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டிருந்ததை கண்டார். இதனால் தான் கார் தீப்பிடித்து எரிந்தது என தெரிய வந்தது.அலுவலகத்தில் காலை நேரத்தில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி சென்றது தெரிய வந்தது.

இந்த சம்பவம் பற்றி ஆனந்தன், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரத்தினபுரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.உடனே நிர்வாகிகள் கட்சி அலுவலகத்துக்கு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி சென்றது யார்? எதற்காக வீசினர்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

Next Story