புழல் சிறைக்குள் பாகிஸ்தான் கொடிகள் சிக்கியது குறித்து கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை


புழல் சிறைக்குள் பாகிஸ்தான் கொடிகள் சிக்கியது குறித்து கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Jun 2017 11:15 PM GMT (Updated: 17 Jun 2017 7:31 PM GMT)

புழல் சிறைக்குள் பாகிஸ்தான் கொடிகள் சிக்கியது குறித்து, தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரும், விஜிலென்ஸ் பீரோ மற்றும் உளவுத்துறை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

புழல் சிறையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விசாரணை சிறையில் 1,280 கைதிகளும், தண்டனை சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் தனி சிறையில் 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையை சுற்றிலும் ராட்சத சுவர் அமைக்கப்பட்டு, அதன் மீது மின்வேலியும் பொருத்தப்பட்டு உள்ளது. ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதன்மேல் துப்பாக்கி ஏந்திய போலீசார், 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஜெயிலர் ஜெயராமன் மற்றும் சிறை போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உயர்மட்ட பாதுகாப்பு சிறை அருகே ராட்சத சுவர் ஓரம் கிடந்த கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு அட்டைப்பெட்டியை பிரித்து பார்த்தனர்.

அதில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடிகள் இருந்தன. 44 செ.மீ. நீளம், 24 செ.மீ. அகலம் கொண்ட ஒரு கொடியும், சிறிய அளவு கொண்ட 103 கொடிகளும், விலை உயர்ந்த ஒரு செல்போனும் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இது குறித்து சிறைத்துறை தலைவர் சைலேந்திரபாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரும், விஜிலென்ஸ் பீரோ மற்றும் உளவுத்துறை போலீசாரும் புழல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story