தேசத்துரோக வழக்கில் இருந்து விடுவிக்க வைகோ கோரிக்கை


தேசத்துரோக வழக்கில் இருந்து விடுவிக்க வைகோ கோரிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2017 9:30 PM GMT (Updated: 17 Jun 2017 7:44 PM GMT)

தேசத்துரோக வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று வைகோ, சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சென்னை,

சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. புத்தகத்தை வெளியிட்ட வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக ஆயிரம் விளக்கு போலீசார் அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர்.

நேற்று இந்த வழக்கு சென்னை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வைகோ, தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

அதற்கு நீதிபதி கோகிலா, ‘இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை உங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சூழலில் இந்த மனுவை இப்போது தாக்கல் செய்ய இயலாது. எனவே மனுவை திரும்பப்பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். இதை வைகோ ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நீதிபதி, ‘இந்த வழக்கில் வைகோ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டியது உள்ளது. எனவே, அரசு தரப்பு வாதத்திற்காக இந்த வழக்கு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

மேலும், கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வைகோ கோர்ட்டில் ஆஜராக தேவையில்லை என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Next Story