ஜவாஹிருல்லா உள்பட 5 பேரின் தண்டனை நிறுத்திவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு


ஜவாஹிருல்லா உள்பட 5 பேரின் தண்டனை நிறுத்திவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-07-01T01:50:16+05:30)

ஜவாஹிருல்லா உள்பட 5 பேருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மத்திய அரசிடம் இருந்தும், ரிசர்வ் வங்கியிடம் இருந்தும் அனுமதி எதுவும் பெறாமல் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.54 கோடியை பெற்றதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லா, மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர்அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து 5 பேரும் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த மாவட்ட செசன்சு கோர்ட்டு, கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்து கடந்த 19-ந் தேதி தீர்ப்பளித்தது. மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பை, மாவட்ட கோர்ட்டு உறுதி செய்துள்ளதால் 5 பேரும், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைய வேண்டும்.

இந்த நிலையில், மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜவாஹிருல்லா உள்பட 5 பேரும் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு வழக்கில், தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும், ரம்ஜான் நோன்பு காலம் என்பதால், கீழ் கோர்ட்டில் சரணடைய தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், கீழ் கோர்ட்டில் 5 பேரும் சரணடைய வருகிற 29-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஜவாஹிருல்லா உள்பட 5 பேரும் முதலில் எழும்பூர் கோர்ட்டில் சரணடையவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து 5 பேரும் எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர், இந்த சரணடைந்த விவரத்தை அவரது வக்கீல்கள், ஐகோர்ட்டுக்கு நேற்று பிற்பகலில் தெரிவித்தனர். இதையடுத்து, 5 பேருக்கும் கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை நிறுத்திவைத்தும், மாதம் முதல் வேலைநாளில் எழும்பூர் கோர்ட்டில் 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி நேற்று மாலையில் உத்தரவிட்டார்.

எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து இரவு 8 மணிக்கு வெளியே வந்த ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறும்போது, ‘கோவையில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காக கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மூலம் திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையாக வழங்கப்பட்டது. நிவாரணம் நிதி தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தி, பயனாளிகளுக்கு முறையாக நிதி வழங்கப்பட்டதாக அறிக்கை அளித்தது. ஆனால் மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை என்று பா.ஜ.க. அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. நாங்கள் வெளிநாடுகளில் இருந்து தனி நபரிடமோ, எந்த அமைப்பிடம் இருந்தோ பணம் பெறவில்லை. இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம்.’ என்றார்.

Next Story