கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு நல உதவிகளை வழங்கினார்


கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு நல உதவிகளை வழங்கினார்
x
தினத்தந்தி 1 July 2017 3:00 AM IST (Updated: 1 July 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளையும், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகங்களையும் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், தொடர்ந்து பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு பணிகளை நான் பார்வையிட்டு, ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் நேரத்தில் அந்தந்த பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகிறேன். குறிப்பாக, மாநகராட்சி அரசு பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் ஆய்வுகளை நடத்தியபோது, அந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முன்வைக்கும் கோரிக்கைகளை எல்லாம் கேட்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, அதன் மூலமாக பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகிறேன். அதையும் கடந்து, எனது சொந்த நிதியில் இருந்து பல்வேறு பணிகளை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பள்ளிகளைப் பொறுத்தவரையில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல பணிகளை நிறைவேற்றி வருகிறேன்.

பாலாக இருந்தாலும், அரிசியாக இருந்தாலும், குதிரை பேர விவகாரமாக இருந்தாலும், தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்கா விவகாரமாக இருந்தாலும், தகவல் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்களே தவிர, முறையான நடவடிக்கைகள் எதையும் எடுப்பதில்லை. ஏனென்றால், இந்த ஆட்சி அவற்றைப் பற்றி கவலைப்படவில்லை. குதிரை பேரத்தால் நடந்து கொண்டிருக்கின்ற இந்த ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு, தொடர்ந்து கொள்ளை அடிப்பதற்கு, ஊழல் புரிவதற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

வருமான வரித்துறை நடத்திய சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி பணப்பட்டுவாடா நடத்திய ஆவணங்கள் கிடைத்திருப்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் பதில் என்ன? அந்த செய்தி வெளியானபோது அவர் நீதிமன்றத்தை நாடினாரா? அல்லது என் மீது தவறான வதந்தி பரப்புகிறார்கள் என்று வழக்குப்போட்டாரா? கிடையாது. அதேபோல, தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்து லஞ்சம் வாங்கியதாக ஒருவார காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செய்தி எப்போது வெளியானதோ, அப்போதே வழக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது வந்து சட்டரீதியாக சந்திப்பதாக சொல்கிறார். உள்ளபடியே அவர் குற்றவாளி இல்லை என்றால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு கொலை குற்றத்துக்கு ஒப்பானது. ஏனெனில், குட்கா போதைப் பொருட்களை சாப்பிட்டால் உயிரே பறிபோகும் நிலை ஏற்படும். மக்கள் நல்வாழ்வுத்துறை என்பது மக்களின் உயிர்களைக் காக்கின்ற ஒரு துறை. ஆனால், இன்றைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அந்தத் துறை மக்களின் உயிர்களை எடுக்கின்ற துறையாக இருந்து கொண்டிருப்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று. சட்டத்துக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதையெல்லாம் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story