ஜி.எஸ்.டி.யில் பிரச்சினை இருந்தால் சரி செய்யலாம்


ஜி.எஸ்.டி.யில் பிரச்சினை இருந்தால் சரி செய்யலாம்
x
தினத்தந்தி 2 July 2017 4:45 AM IST (Updated: 2 July 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.யில் பிரச்சினை இருந்தால் சரி செய்யலாம் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி.யில் பிரச்சினை இருந்தால் சரி செய்யலாம் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

பட்டாசு, திரைப்படம் போன்ற துறையினர் எந்தவித கலக்கமும் அடைய தேவை இல்லை. ஏற்கனவே ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்தது போல ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை மீண்டும் இந்த கவுன்சிலுக்கு எடுத்து வரலாம்.

ஆகஸ்டு மாதத்தில் தொடங்கி 3 மாதங்களுக்கு ஒவ்வொரு முதல் சனிக்கிழமையும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்படுவதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அப்போது வரிகள் அதிகமாக அல்லது குறைவாக இருந்தால் கவுன்சில் கவனத்துக்கு கொண்டு வந்து சரி செய்யலாம். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் சாதக பாதகங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை.

சினிமா டிக்கெட்டுகளை பொறுத்தவரை சினிமா துறையினர் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு நூறு ரூபாய்க்கு கீழே உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் மற்றும் நூறு ரூபாய்க்கு மேல் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் என்று வரி நிர்ணயிக்கப்பட்டது.

வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு தான் அனைத்தும் தீர்மானிக்கப்பட்டு உள்ளன. ஒரே நாடு ஒரே வரி அமல்படுத்தப்படும்போது உற்பத்தி பெருகும். விலைவாசி கட்டுப்பாட்டில் வரும்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி யாரேனும் அதிக விலைக்கு பொருட்களை விற்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


Next Story