சரக்கு, சேவை வரி விதிப்பால் ஓட்டல்களில் விலை உயர்வு அமலுக்கு வந்தது


சரக்கு, சேவை வரி விதிப்பால் ஓட்டல்களில் விலை உயர்வு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 2 July 2017 5:15 AM IST (Updated: 2 July 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு, சேவை வரி விதிப்பால் ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.

சென்னை,

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்பதை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்கனவே இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது. சென்னை மாநகரில் உள்ள வணிக நிறுவனங்களில் இந்த வரி முறையாக அமல்படுத்தப்படவில்லை.

ஆனால் ஓட்டல்களில் மட்டும் உணவு பண்டங்களின் மீது சரக்கு, சேவை வரி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பெரும்பாலான பாத்திரக்கடை, பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நோட்டு புத்தக வியாபாரிகள், கியாஸ் ஸ்டவ் வியாபாரிகள் என பலரும் இந்த வரி முறையை அமல்படுத்தவில்லை.

வணிகர்களுக்கு சரக்கு சேவை வரி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது ஒரு காரணமாக உள்ளது.

சிறிய ஓட்டல்களில் உணவு பண்டங்கள் ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டால் அரை சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இது சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்டதன் மூலம் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. சாதாரண வகை ஓட்டல்களில் வசூலிக்கப்பட்ட 2 சதவீதம் வரி, தற்போது 12 சதவீதமாகவும், குளிர்சாதன வசதி (ஏ.சி.) உள்ள ஓட்டல்களில் 8 சதவீதம் வரி 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஓட்டல்களில் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.

குறிப்பாக ரூ.100 மதிப்பில் சாப்பிட்டால், சரக்கு சேவை வரியும் சேர்த்து ரூ.118 செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் அண்ணாசாலையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் 2 இட்லி ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தோசை ரூ.60-ல் இருந்து ரூ.65-க்கும், பூரி ரூ.70-ல் இருந்து ரூ.75-க்கும், பொங்கல் ரூ.70-ல் இருந்து ரூ.75-க்கும் விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் வடை ரு.35-ல் இருந்து ரூ.45-க்கும், சாப்பாடு ரூ.125-ல் இருந்து ரூ.140-க்கும், காபி ரூ.33-ல் இருந்து ரூ.35-க்கும், டீ ரூ.32-ல் இருந்து ரூ.35-க்கும் கட்டணம் உயர்ந்துள்ளது.

அதேபோல் டீத்தூள் மீதான சரக்கு சேவை வரியால் சாதாரண டீக்கடைகளில் ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாரிமுனையில் பாத்திரங்கள், மளிகை பொருள்கள், கியாஸ் ஸ்டவ், பூஜை பொருட்கள், வெண்கல பொருட்கள், குங்குமம், மஞ்சள், திருநீறு வியாபாரிகள், பர்னிச்சர்கள், மெத்தை, தலையணைகள் வியாபாரிகளுக்கு சரக்கு, சேவை வரி குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை.

எனவே நேற்று அவர்கள் பழைய விலைக்கே பொருட்களை விற்பனை செய்தனர். சரக்கு, சேவை வரியை அமல்படுத்தவில்லை.

அவர்கள் கூறும் போது, சரக்கு, சேவை வரி குறித்து எங்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஏற்கனவே உள்ள விலைக்கு பொருட்களை விற்பனை செய்கிறோம். சரக்கு இருக்கும் வரை பழைய விலைக்கு விற்பனை செய்வோம். அதற்கு பிறகு விற்பனையை நிறுத்தி விடலாமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்’ என்றனர்.

மேலும் பொருட்கள் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருளுக்கு ஒரு குறியீட்டு எண் நிர்ணயிப்பார்கள். அந்த குறியீட்டு எண் உதவியுடன் வியாபாரிகளுக்கு சரக்குகளை அனுப்புவார்கள். சரக்கு, சேவை வரி செலுத்தும் போது ரசீதில் அந்த குறியீட்டு எண் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த குறியீடு எண் பலருக்கு கிடைக்காததால் கணினி மூலம் விற்பனை ரசீது வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சரக்கு சேவை வரி குறித்து முழுமையாக தெரியாததால் வியாபாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா, நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்கு வெற்றிலை விற்பனைக்கு வருகிறது. இந்த வெற்றிலைக்கு தற்போது சரக்கு, சேவை வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் கார்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கார்களின் விலைகள் சரிவு அடைந்துள்ளன.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், தனது பல்வேறு மாடல் கார்களில் விலையை 3 சதவீத அளவுக்கு குறைத்துள்ளது. ஆல்டோ கார் விலை ரூ.2,300-ல் இருந்து ரூ.5,400 வரையும், வேகன் ஆர் ரூ.5,300-ல் இருந்து ரூ.8.300 வரையும், ஸ்விப்ட் ரூ.6,700-ல் இருந்து ரூ.10,700 வரையும் குறைக்கப்பட்டுள்ளது.

பாலினோ கார் விலை ரூ.6,600-ல் இருந்து ரூ.13,100 வரையும், டிசையர் கார் ரூ.8,100-ல் இருந்து, ரூ.15,100 வரையும் குறைந்துள்ளது.

எர்டிகா கார் ரூ.21,800 வரையிலும், சியாஸ் ரூ.23,400 வரையும் குறைக்கப்பட்டுள்ளது.

விதாரா பிரஸ்ஸா எஸ்.யு.வி. விலை ரூ.10,400 முதல் ரூ.14,700 வரையும், எஸ் கிராஸ் ரூ.17,700 முதல் 21,300 வரையும் சரிவை சந்தித்துள்ளது.

டயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனமும் கார் விலைகளை குறைத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் புதிய பார்ஜூனா கார் விலை ரூ.2.17 லட்சம் வரையிலும், இனோவா கிரைஸ்டா ரூ.98,500 வரையிலும், கரோல்லா ஆல்டிஸ் ரூ.92,500 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.

பிளாட்டினம் எத்தியோஸ் கார் ரூ.24,500 வரையும், எதியோஸ் லிவா ரூ.10,500 வரையிலும் குறைந்துள்ளது.

சொகுசு காருக்கு பெயர் பெற்ற பி.எம்.டபிள்யு. கார் நிறுவனம், தனது மாடல் கார்களுக்கு ரூ.70 ஆயிரம் தொடங்கி, ரூ.1.80 லட்சம் வரையிலும் விலை குறைப்பு செய்துள்ளது.

டாடா மோட்டார்சின் அங்கமான ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் விலை சராசரியாக 7 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளது. 

Next Story