மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்


மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 2 July 2017 9:45 PM GMT (Updated: 2 July 2017 7:06 PM GMT)

கொள்ளிடம்-வெள்ளாற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் கட்டுப்பாடின்றி நடைபெறும் மணல் கொள்ளையால் அவை பாயும் மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றை அரசு கட்டுப்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு அடுத்தடுத்து மணல் குவாரிகளை மட்டும் திறந்து வருகிறது. கடந்த வாரத்தில் இரு முறை நாகை, கடலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள ஆழங்காத்தான் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இயங்கும் மணல் குவாரியில் விதிகளை மீறி 40 அடி ஆழம் வரை மணல் வெட்டி எடுக்கப்படுகிறது. சில இடங்களில் 50 அடி, 60 அடி ஆழம் வரை மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது களிமண் வரும் வரை மணல் சுரண்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இதைவிட மோசமாக இயற்கை வளங்களை சூறையாட முடியாது.

கடலூர் மாவட்டத்தில் புளியங்குடி, அரசூர், நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாக்குடி ஆகிய இடங்களில் கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடங்களிலும் 50 அடி ஆழத்திற்கும் மேலாக மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் மதகளிர்மாணிக்கம் கிராமத்தில் வெள்ளாற்றிலும் குவாரி அமைத்து மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. பாப்பாக்குடி குவாரியில் 50 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. பாப்பாக்குடியில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து அங்கிருந்து தான் மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 133 ஊர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டதால் நாகை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையால் அம்மாவட்டங்களில் வாழும் மக்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முதலாவதாக, கொள்ளிடம் கடலில் கலக்கும் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாததால், கடல் நீர் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்நுழைந்திருக்கிறது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் உப்பாக மாறிவிட்டது.

இரண்டாவதாக கொள்ளிடற்றில் மணல் அள்ளப்படுவதால் கொள்ளிடம் ஆற்றிலும், அதையொட்டியப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் அங்கு செயல்படுத்தப்பட்டு வந்த குடிநீர்த் திட்டங்கள் அனைத்தும் முற்றிலுமாக செயலிழந்து விட்டன. இதனால் அந்த கிராமங்களில் வாழும் மக்கள் குடிநீர் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றைப் பொறுத்தவரை எப்போதாவது ஒருமுறை மட்டுமே தண்ணீர் வரும். மீதமுள்ள நாட்களில் நிலத்தடி நீரை நம்பித் தான் அங்குள்ள மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இப்போது நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால் விவசாயத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் இல்லை என்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

இனியும் விவசாயமும், இயற்கை வளங்களும் அழியாமல் தடுக்கப்பட வேண்டும் என்றால், கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதை செய்யத் தமிழக அரசு தவறினால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story