அடையாறு நதி ரூ.555 கோடியில் சீரமைக்கப்படும்


அடையாறு நதி ரூ.555 கோடியில் சீரமைக்கப்படும்
x
தினத்தந்தி 3 July 2017 9:57 PM IST (Updated: 3 July 2017 9:56 PM IST)
t-max-icont-min-icon

அடையாறு நதி ரூ.555 கோடியில் சீரமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110–விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:–

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் அட்டல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான சத்துவாச்சாரி, அலமேல்மங்காபுரம் மற்றும் குணவட்டம் ஆகிய பகுதிகளில் 343 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் வேலூர் மாநகராட்சியிலுள்ள 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் 442 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தினால் 2 லட்சத்து 58 ஆயிரத்து 734 பேர் பயன்பெறுவர். திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பொன்மலை மற்றும் அபிசேகபுரம் பகுதிகளில் 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 454 பேர் பயன்பெறுவர்.

திருநெல்வேலி மாநகராட்சி இணைப்பு பகுதிகளில் 326 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 857 பேர் பயன்பெறுவர்.

அடையாறு உப்பங்கழி மற்றும் கழிமுக பகுதியின் 358 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அடையாறு நதியின் தொடக்கம் முதல் முகத்துவாரம் வரையிலான 42 கிலோ மீட்டர் தூரத்தை 555 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story