அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை ஓபிஸ் அணியினர் மறுப்பு


அ.தி.மு.க அணிகள் இணைப்பு   குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை ஓபிஸ் அணியினர் மறுப்பு
x
தினத்தந்தி 4 July 2017 1:42 PM IST (Updated: 4 July 2017 1:41 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்த தகவலுக்கு ஓபிஸ் அணியைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

சென்னை

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். மறைந்தபோது எவ்வாறு கட்சி பிளவுபட்டு நின்றதோ, அதேபோல் கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அ.தி.மு.க. 3 பிரிவாக உள்ளது.

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் (அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா), முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியும் (அ.தி.மு.க. அம்மா) உருவாகியுள்ளது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா தலைமையில் ஒருங்கிணைந்தது. அதேபோல், இப்போதும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. முதலில், திரை மறைவுக்கு பின்னாலேயே 2 அணி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையை தொடங்கினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில், சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வகையில், கட்சியில் இருந்து டி.டி.வி.தினகரன் ஓரங்கட்டப்படுவதாக, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் அறிவித்தனர். டி.டி.வி.தினகரனும் கட்சியை விட்டு ஒதுங்குவதாக வெளிப்படையாகவே அறிவித்தார். இதனால், அ.தி.மு.க.வில் உள்ள 2 அணிகளும் இணைவதற்கு இணக்கமான சூழல் ஏற்பட்டது. விரைவில் 2 அணிகளும் கைகோர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு வசதியாக, 2 அணிகளிலும் பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டன. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையிலும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டது. பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான நாளும் முடிவு செய்யப்பட்டது.

சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு இந்த அரசு உத்தரவிட வேண்டும்’’ என்று புதிதாக 2 நிபந்தனைகளை ஓ. பன்னீர் செல்வம் விதித்தார்.இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் சமரச பேச்சுவார்த்தையை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திருவெற்றியூரில் நடந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு அமைக்கபட்ட குழுவை கலைத்தார். இதனால் இரு அணி இணையாது என கூறபட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாக கூறபட்டது. இது தொடர்பாக பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்  அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள இந்த தகவலை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உடனடியாக மறுத்தனர். ஏதோ உள்நோக்கத்துடன் ஜெயக்குமார் இப்படி பேசி வருவதாக ஓ.பி.எஸ். அணியினர் தெரிவித்தனர்.

இணைப்பு பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடக்காத நிலையில் ஜெயக்குமார் திட்டமிட்டு பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் ஓ.பி.எஸ். அணி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க. அணிகள் இணைய போவ தாகவும், இதன் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட போவதாகவும் ஒருங்கிணைப்பு குழுவில் 7 பேர் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் ஆரம்பத்தில் இருந்தே இதுபோல் தான் தெரிவித்து வருகிறார். அவர் சொல்வதைப்போல எங்கள் அணி சார்பில் எந்த குழுவும் அமைக்கப்பட வில்லை. பேச்சுவார்த்தையும் நடக்க வில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story