ஏழை–எளிய மக்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரியை மறுபரிசீலனை செய்யவேண்டும்


ஏழை–எளிய மக்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரியை மறுபரிசீலனை செய்யவேண்டும்
x
தினத்தந்தி 5 July 2017 12:10 AM IST (Updated: 5 July 2017 12:09 AM IST)
t-max-icont-min-icon

ஏழை–எளிய மக்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரியை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஜெ.தீபா அணியின் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஜி.எஸ்.டி. வரியால் 80 சதவீத பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான பொருளாதாரம் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் வரவில்லை. குறிப்பாக பெட்ரோலியம், மின்சாரம், ரியல் எஸ்டேட் போன்றவை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் வரவில்லை.

இதுவரையில் வரி விலக்கு பெற்று வந்த 500–க்கு மேற்பட்ட பொருட்களுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பால் விலையில் ஏற்படும் மாற்றத்தை தங்களது லாபமாக மாற்றிக்கொள்ளும் கார்பரேட்டுகளை கட்டுப்படுத்தவேண்டும். ஆனால் இச்சட்டத்தில் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. அதனால் சுமார் ரூ.1 லட்சம் கோடி பலன் மக்களுக்கு செல்லாமல் கார்பரேட்டுகளிடம் செல்கிறது.

தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், கோவில்பட்டி போன்ற இடங்களில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டிகள் தேக்கம் அடைந்துள்ளன. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்திய தீப்பெட்டி உற்பத்தியில் 85 சதவீத பங்களிப்பினை தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, சங்கரன்கோவில், குடியாத்தம் போன்ற பகுதிகளில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் கொடுக்கின்றன. பட்டாசு மீதான ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்க சிவகாசியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆகவே தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை–எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரியை மறுபரிசீலனை செய்யவேண்டும். போராடி வரும் அணைத்து தரப்பினருக்கும் உறுதுணையாக துணை நிற்போம். தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story