தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.197 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.197 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்
x
தினத்தந்தி 5 July 2017 4:45 AM IST (Updated: 5 July 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

ரூ.197 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் திறந்துவைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னை மாவட்டம் நொச்சிக்குப்பம், பி.எஸ்.மூர்த்தி நகர், நாகூரான் தோட்டம், கடலூர் மாவட்டம் வெளிச்செம்மண்டலம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தஞ்சாவூர் மாவட்டம் மகாராஜசமுத்திரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.197 கோடியே 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி(வீடியோ கான்பரன்சிங்) மூலம் திறந்துவைத்தார்.

நெல்லை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 90 லட்சம் மதிப்பில் 41 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள் மற்றும் ஒரு தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை அலுவலக கட்டிடம், வேலூர் மத்திய சிறை வளாகத்தில் ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்பில் சிறைத்துறையினருக்கான குடியிருப்புகள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்துறை சார்பில் ரூ.57 கோடியே 99 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 258 காவல்துறை குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 4 காவல்துறை கட்டிடங்கள், 30 சிறைத்துறை குடியிருப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 32 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை குடியிருப்புகள், விருந்தினர் மாளிகை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், அரசூரில் ரூ.13 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இருவழித்தட ரெயில்வே மேம்பாலம் உள்பட தமிழகம் முழுவதும் ரூ.47 கோடியே 84 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 12 பாலங்கள் மற்றும் ஒரு அலுவலக கட்டிடத்தையும் முதல்–அமைச்சர் திறந்துவைத்தார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ரூ.6 கோடியே 94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 4 பாலங்களையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story