27 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்
கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை,
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013–ம் ஆண்டு மே 10–ந் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிஎண் 110–ன் கீழ் அறிவித்த அறிக்கையில், மாநிலத்தில் உள்ள போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகள் சேவை எவ்வித தொய்வும் இன்றி வழங்கிட பணிமனைகள் மிகவும் அவசியம் ஆகும். எனவே, பணிமனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் மற்றும் தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர் கோட்டம் சூலூரிலும் புதிய பணிமனைகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மாநகரபோக்குவரத்துக் கழகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தில், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தினால் 14 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனையுடன் கூடிய பேருந்து முனையம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூரில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை ஆகியவற்றை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், 2017–2018 ஆம் கல்வி ஆண்டில் 739 கோடி ரூபாய் செலவில் 27 லட்சத்து 5 ஆயிரத்து 160 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவியர்களுக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் 7 மாணவ–மாணவிகளுக்கு கையடக்க பேருந்து பயண அட்டைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story