தமிழக சட்டசபையில் இன்று முதல் 2 நாள் காவல் துறை மானிய கோரிக்கை விவாதம்


தமிழக சட்டசபையில் இன்று முதல் 2 நாள் காவல் துறை மானிய கோரிக்கை விவாதம்
x
தினத்தந்தி 6 July 2017 3:45 AM IST (Updated: 6 July 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) முதல் 2 நாட்கள் காவல் துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

சென்னை,

உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கிறார்.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 14–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 14 நாட்கள் பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், காவல் மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது. ஆனால், இந்த முறை 2 நாள்கள் நடைபெறுகிறது. அதாவது, இன்றும், நாளையும் (7–ந் தேதி) காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த 2 நாள் விவாதத்தில் பங்கேற்று பேசும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கிறார்.

8–ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரம் கிடையாது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரை இடம்பெறுகிறது. மேலும், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளிக்கிறார். மேலும், தனது துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.


Next Story