விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது சட்டசபையில் முதல்-அமைச்சர் உறுதி
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது சட்டசபையில் முதல்-அமைச்சர் உறுதி
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று 2-வது நாளாக காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
விவாதத்தை தொடங்கிவைத்து, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி (காரைக்குடி தொகுதி) பேசினார்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
உறுப்பினர் ராமசாமி:- காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க செல்லும் பொதுமக்கள் கண்ணிய குறைவாக நடத்தப்படுகிறார்கள். ஏதாவது எதிர்த்து பேசினால், அவர்கள் மீதே வழக்குப்போடுவதாக போலீசார் மிரட்டுகிறார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எந்த காவல் நிலையத்தில் இதுபோன்று நடந்தது என்று சொன்னால் சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினர் ராமசாமி:- காவல் நிலையங்களில் பொதுவாக நடப்பதைத்தான் சொன்னேன். சரி செய்து தாருங்கள். போலீசாருக்கு வாராந்திர ஓய்வு, மருத்துவப்படி வழங்க வேண்டும். தேர்தல் வேலைக்கு போலீசாரை பயன்படுத்துகிறோம். வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு இணையாக அவர்களுக்கு பயன்கிடைக்க வேண்டும். தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவு. முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கும் தண்டனை பெற்றுத்தரப்படுகிறது.
உறுப்பினர் ராமசாமி:- நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட பிரச்சினை, டாஸ்மாக் கடைகளை திறப்பதா?, மூடுவதா? என்பதில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- சில விஷமிகள் பொதுமக்களை தூண்டிவிடுவதால் போராட்டம் நடத்த சொல்கின்றனர். கதிராமங்கலம் பிரச்சினையை பொறுத்தவரை, அங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்டம். ஆனால், இப்போது சமூக விரோதிகள் பொதுமக்களை தூண்டிவிட்டு அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
உறுப்பினர் ராமசாமி:- நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் பிரச்சினையில், அங்குள்ள மக்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, திட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என்று உறுதி அளித்த நிலையில், அதை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏன் திட்டத்தை தடுக்க நீங்கள் மத்திய அரசை வலியுறுத்தவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.
அமைச்சர் எம்.சி.சம்பத்:- இந்த விஷயத்தில் மாநில அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்கமாட்டோம்.
உறுப்பினர் ராமசாமி:- உங்கள் உறுதியை நம்புகிறோம். ஆனால், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் விளக்கம் அளித்தார். மாநில அரசு நிச்சயம் அதற்கு அனுமதி தராது என்றார். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இந்த திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியே தீர்வது என்ற முடிவில் உள்ளது. நெடுவாசல் மக்கள் 2 மாதமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, இந்த திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது என்ற உறுதியை நீங்கள் பெற்றுத்தரவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நாங்கள் மத்திய ஆட்சி கூட்டணியில் இல்லை. நீங்கள் தான் 16 ஆண்டு காலம் காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தீர்கள். நான் பிரதமரை சந்தித்தபோது இந்த பிரச்சினை குறித்து அழுத்தம் கொடுத்துள்ளேன்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:- மத்திய ஆட்சியில் நாங்கள் கூட்டணியில் இருந்தபோது, என்.எல்.சி. பிரச்சினை, சேலம் உருக்காலை பிரச்சினைக்கு உரிய அழுத்தம் கொடுத்தோம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- மத்தியில் எதிர்க்கட்சியாக நாங்கள் இருந்தாலும், எங்களால் முடிந்த அளவுக்கு அழுத்தத்தை மத்திய அரசிடம் கொடுத்துள்ளோம். தமிழகத்தின் நலன் தொடர்ந்து காக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் பி.தங்கமணி:- மத்தியில் நீங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது தான் என்.எல்.சி. பங்குகளை 5 சதவீதம் விற்க முடிவு செய்யப்பட்டது. அதை தமிழக அரசே வாங்கும் என்று அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார்.
உறுப்பினர் ராமசாமி:- டாஸ்மாக் மதுக்கடை பிரச்சினை குறித்து அரசின் தெளிவான முடிவு என்ன என்பது தெரிய வேண்டும்.
அமைச்சர் பி.தங்கமணி:- 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, 5 ஆண்டுகளில் படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால், 6,500 மதுக்கடைகள் இருந்தபோது இல்லாத பிரச்சினை இப்போது ஏன் வருகிறது?.
உறுப்பினர் ராமசாமி:- எந்த மதுக்கடையை திறப்பது?, எந்த மதுக்கடையை மூடுவது? என்று உங்களால் முடிவெடுக்க முடியவில்லை. ஏன் அதை ஒழுங்குபடுத்தவில்லை.
அமைச்சர் பி.தங்கமணி:- திருப்பூரில் ஊருக்கு வெளியே இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது. அதாவது, அரசுக்கு எதிராக கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு வந்த எம்.எல்.ஏ.வையும் அதில் சேர்த்துக்கொண்டனர். ஆனால், குறிப்பிட்ட அந்தக் கடையை அடைத்த பிறகும் போராட்டம் தொடர்ந்தது. அதனால், நடவடிக்கை எடுக்க வேண்டியதாகி விட்டது.
உறுப்பினர் ராமசாமி:- அந்த போராட்டத்தில் பெண் ஒருவரை நடுரோட்டில் வைத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- இந்த போராட்டத்தை சில அமைப்புகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அரசுக்கு எதிராக நடத்தின. போராட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வை மீட்டுக் கொண்டுவர போலீசார் முயன்றபோது தான், அந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. போராட்டம் நடத்துவது என்பது இப்போது பேஷனாகிவிட்டது. போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கியதுடன் கொடுஞ்சொற்களாலும் பேசினார்கள். இந்த விஷயத்தில் காவல் துறை தன் கடமையை செய்துள்ளது.
உறுப்பினர் ராமசாமி:- எப்படி இருந்தாலும், ஒரு பெண்ணை போலீஸ் அதிகாரி தாக்கியிருக்க கூடாது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- மீண்டும்.. மீண்டும்.. உறுப்பினர் அதையே கூறுகிறார். இதுபோன்ற சம்பவங்களை நாங்களும் விரும்பவில்லை.
உறுப்பினர் ராமசாமி:- இப்போது மணல் அள்ளுவதில் சரியான நடைமுறை இல்லை. அதனாலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- இதற்கு முன்பு மணல் கொள்ளையடிக்கப்பட்டது. அரசு அதை தடுத்து, இப்போது அரசே மணல் குவாரிகளை திறந்துள்ளது. மொத்தம் 23 மணல் குவாரிகள் உள்ளன.
அதற்கு முறையான சாலை வசதிகள் வேண்டும். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் லோடு மணல் தேவை. தற்போது, ஒரு நாளைக்கு 7 ஆயிரம் லோடு மணல் வழங்கப்படுகிறது. மணல் திருட்டை முழுமையாக தடுக்கவே இந்த முறை பின்பற்றப்படுகிறது. தற்போது, ஆன்-லைன் மூலம் மணல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பல சீர்திருத்தங்களை கொண்டுவர உள்ளோம். அது வந்ததும், மணல் திருட்டு முழுமையாக தடுக்கப்படும். புதிதாக மணல் குவாரிகளும் திறக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Related Tags :
Next Story