கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழகத்தில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
ஒகேனக்கல்,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2,365 கனஅடியும், கபினி அணையில் இருந்து 1,000 கனஅடியும் என மொத்தம் 3,365 கனஅடி தண்ணீர் கடந்த 30-ந் தேதி திறந்து விடப்பட்டது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று காலை 8 மணி அளவில் கர்நாடக- தமிழக எல்லையில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 100 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,100 கனஅடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல் பிரதான மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்வை கோபுரம், நடைப்பாதை, தொங்குபாலம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவி, நடைப்பாதை மற்றும் காவிரி கரையோரம் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் ஒலிப்பெருக்கி மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டும் பரிசல்கள் இயக்க வேண்டும் என்று பரிசல் ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
இந்த தண்ணீர் வரத்தை மத்திய நீர்ப்பாசனத்துறை அலுவலர்கள் பரிசலில் சென்று அளந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,150 கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story