போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு உடல் தகுதி தேர்வு மாதம் இறுதியில் நடக்கிறது


போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு உடல் தகுதி தேர்வு  மாதம் இறுதியில் நடக்கிறது
x
தினத்தந்தி 8 July 2017 4:30 AM IST (Updated: 8 July 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

சென்னை, 

இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 23-1-2017 அன்று இரண்டாம் நிலைக் காவலர் (13,137), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (1,015) மற்றும் தீயணைப்போர் (1,512) பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டது.

இதுவரை நடைபெற்ற போலீஸ் வேலைக்கான பொதுத் தேர்வுகளிலேயே இந்த தேர்வில் தான் அதிக பட்சமாக (6.32 லட்சம்) விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதற்குமுன்பு 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் அதிகபட்சமாக 2.71 லட்சம் விண்ணப்பங்களே பெறப்பட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்திய பொதுத் தேர்வில் முதன் முறையாக திருநங்கைகள் மூன்றாம் பாலினப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர்.

21-5-2017 (ஞாயிறு) அன்று சென்னை உள்பட 32 மாவட்ட தலைநகரங்களில் 410 தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 4.82 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினார்கள்.

எழுத்துத் தேர்வு முடிவுகள் www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் (நேற்று) வெளியிடப்பட்டது.

உடல்கூறு அளத்தல் - உடல்தகுதி தேர்வு - உடற்திறன் போட்டிகள் ஆகியவை அடுத்தகட்ட தேர்வுகள் ஆகும்.

இரண்டாம்கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இக்குழுமத்தின் மேற்கூறிய இணையதள முகவரியிலிருந்து 12-7-2017 முதல் தங்களது சேர்க்கை எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண் விவரம் வெளியிடப்படமாட்டாது. இரண்டாம்கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்படாதவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை சேர்க்கை எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு 12-7-2017 முதல் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்தகட்ட தேர்வுகளான உடல்கூறு அளத்தல் - உடல்தகுதி தேர்வு- உடற் திறன் போட்டிகள் இந்த மாதம் இறுதி வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 15 மையங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி உடல்கூறு அளத்தல் - உடல்தகுதி தேர்வு - உடற் திறன் போட்டித் தேர்வில் விண்ணப்பதாரர்கள் நடைமுறையில் உள்ள விதியின்படி 1:5 என்ற விகிதாசாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story