ஆசிரியர்கள் போராட நினைப்பது எந்த வகையில் நியாயம்? ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கேள்வி
அரசு பள்ளி மாணவர்களின் நலன்கருதி எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட நினைப்பது எந்த வகையில் நியாயம்? என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த பள்ளி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணைப்படி எத்தனை அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவரப்பட்டுள்ளது?, தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தான் ஆங்கில வழிக்கல்வியிலும் பாடம் நடத்துகின்றார்களா?, அந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பாடம் நடத்த உரிய பயிற்சி பெற்றுள்ளார்களா?, அரசு பள்ளிகளை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் சேர்க்க காரணம் என்ன?, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று அரசு ஏன் கட்டாய உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது உள்ளிட்ட 20 கேள்விகளை எழுப்பியது. அதன்பின்பு, இதுதொடர்பாக வருகிற 14-ந்தேதிக்குள் அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்த 9-ம் வகுப்பு மாணவர்கள் 42 பேர் தோல்வி அடைந்ததாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறியதாவது:-
அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என்று எனக்கு 1,500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. ஆண்டுக்கு பள்ளி நாட்களான 165 நாட்களில் 65 நாட்கள் மட்டுமே ஒரு ஆசிரியர் பள்ளிக்கு சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதுபோன்ற ஆசிரியர்களால் மாணவர்களின் கல்வித்தரத்தை எப்படி உயர்த்த முடியும். ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அவர்கள் கடமையை முறையாக செய்யாததை எப்படி ஏற்க முடியும். அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் நலன் கருதி இந்த நீதிமன்றம் அரசிடம் சில கேள்விகளை எழுப்பி உள்ளது.
அதற்கு எதிராக ஆசிரியர்கள் போராட நினைப்பது எந்த வகையில் நியாயம். போராட்ட அறிவிப்பை வெளியிடும் ஆசிரியர்களை கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும். மாணவர்களை 8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக்கூடாது என்று சட்டம் உள்ளதால் அதுவரை அந்த குழந்தைகளை பற்றி ஆசிரியர்களும், பெற்றோர்களும் கவலைப்படுவதில்லை. 9-ம் வகுப்புக்கு அந்த மாணவர் வரும்போது, பெரும் சுமையை திணிக்கிறார்கள்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
இதன்பின்பு, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் தொடர்பான வழக்கில் பள்ளி முதல்வர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story