மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 14–ந் தேதி வெளியிடப்படுகிறது
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 14–ந் தேதி வெளியிடப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க இன்றே கடைசி நாள்.
சென்னை,
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க 2,900 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள்போக, மாநில ஒதுக்கீட்டுக்கு 2,445 இடங்கள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய கல்வி வாரியத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கப்படும்.
ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும், 10 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இதில் மொத்தம் 1,800 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.
மருத்துவ கல்விக்கான தரவரிசை பட்டியல் 14–ந் தேதி வெளியிடப்பட உள்ளது. மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? பிளஸ்–2 தேர்வு அடிப்படையில் சேர்க்கையா? என்று இன்னும் தெரியாமல் மாணவ–மாணவிகள் மற்றும் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். இதுபற்றி தமிழக அரசு இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை.கடந்த மாதம் 27–ந் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. நேற்று விண்ணப்பங்கள் வழங்க கடைசி நாள். மொத்தம் 43 ஆயிரம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 26 ஆயிரம் பேர் தான் விண்ணப்பங்கள் பெற்றனர்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு என்ற முகவரிக்கு இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் வந்துசேர வேண்டும். மருத்துவ தேர்வுக்குழு அலுவலகத்தில் நேற்றே ஏராளமான மாணவ–மாணவிகள் பெற்றோருடன் வந்து நிரப்பப்பட்ட படிவங்களை சமர்ப்பித்தனர். நேற்றைய நிலவரப்படி 32 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
மருத்துவ கலந்தாய்வு நடத்தும் அதிகாரி கூறியதாவது:–
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதாவில் ஜனாதிபதி கையெழுத்திட்டு வந்தால், பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். அவ்வாறு வரவில்லை என்றால் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
இப்போதைய நிலவரப்படி 14–ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 17–ந் தேதி கலந்தாய்வு தொடங்கும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.