அமல்படுத்தாத காலக்கட்டத்துக்கும் வரி: ஜூன் மாத கட்டணத்தில் ஜி.எஸ்.டி. வரியை சேர்ப்பதா?


அமல்படுத்தாத காலக்கட்டத்துக்கும் வரி:  ஜூன் மாத கட்டணத்தில் ஜி.எஸ்.டி. வரியை சேர்ப்பதா?
x
தினத்தந்தி 9 July 2017 4:15 AM IST (Updated: 9 July 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஜூன் மாதத்துக்கான தொலைபேசி கட்டணத்தில் ஜி.எஸ்.டி. வரி சேர்க்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை,

ஜூன் மாதம் தொலைபேசி மற்றும் கிரெடிட் கார்டு சேவைகளை பயன்படுத்தியவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்படாத காலத்துக்கு அவர்கள் வரி செலுத்தவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் தொலைதொடர்பு சேவைகள் வழங்கும் நிறுவனங்கள், ஜூலை 1-ந்தேதிக்கு பின்னர் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய தொலைபேசி கட்டண விவர பட்டியலில் (பில்), சேவை கட்டணத்துக்கு பதிலாக ஜி.எஸ்.டி. வரி 18 சதவீத கட்டணம் கூடுதலாக இணைத்து வழங்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்படாத காலக்கட்டத்துக்கான வரியை செலுத்த வேண்டுமா? என்று வாடிக்கையாளர்கள் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் வரி விதிக்கப்படாத காலக்கட்டத்துக்கான வரி தொகையை திரும்ப பெறவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஜூன் மாதத்துக்கான தொலைபேசி ‘பில்’லை ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்திய பின்னர் பெற்றவர்கள் சிலர் கூறியதாவது:-

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பகல் கொள்ளையாக இருக்கிறது. தொலைபேசி கட்டணத்தை பார்த்தாலே அந்த விவரம் அனைவருக்கும் தெரிந்துவிடும். ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தாத காலத்துக்கு, ஒரு மாத வரியை நாங்கள் முன்பே செலுத்த வேண்டியது உள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் காரணமாக சேவையை பெறாமலேயே அதற்கான கட்டணத்தை எப்படி செலுத்தமுடியும்? ஆகவே தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த வரிக்கான தொகையை ரத்து செய்யவேண்டும். தொலைதொடர்பு நிறுவனங்கள் இதற்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, அந்த தொகையை செலுத்துவதில் இருந்து விலக்கு பெறவேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story