ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது


ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது
x
தினத்தந்தி 10 July 2017 5:27 AM IST (Updated: 10 July 2017 5:27 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

ராமேசுவரம்,

எல்லை மீறி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அறிந்த தமிழக மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து ராமேசுவரத்தில் நடைபெற்ற அனைத்து மீனவர்கள் சங்க கூட்டத்தில் இலங்கையின் தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், இலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 160 படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும் வருகிற 14-ந்தேதி ராமேசுவரம் தபால் அலுவலகம் முன்பு மீனவர்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ராமேசுவரம் மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வேலைநிறுத்த போராட்டம் குறித்து மீனவர் சங்க தலைவர்கள் கூறுகையில், இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தால் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் மெத்தனத்தால் மீன்பிடி தொழில் அழியும் அபாயம் உள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ளபடி பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் அல்லது கச்சத்தீவை மீட்டு மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.


Next Story