ஓ.பன்னீர் செல்வம் தோட்டத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது பதற்றம் அதிரடிபடை குவிப்பு


ஓ.பன்னீர் செல்வம்  தோட்டத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது  பதற்றம்  அதிரடிபடை குவிப்பு
x
தினத்தந்தி 10 July 2017 1:26 PM IST (Updated: 10 July 2017 1:26 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கிராம மக்கள் போலீஸ் வாகனத்தை சுற்றி வளைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்ªசல்வத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 200 அடி ஆழத்தில் ராட்சத கிணறுகள் தோண்டப்பட்டது. இதனால் அருகில் உள்ள கிணறுகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தில் வெட்டப்பட்ட கிணற்றை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதனை மூட வேண்டும் எனவும் தெரிவித்து பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். அதிகாரிகள் சமரசம் செய்து உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஓ.பி.எஸ். தோட்டம் உள்ள பகுதியை அளந்து சர்வே செய்தனர்.

தொடர்ந்து லெட்சுமிபுரம் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நேற்று இரவு கிராம மக்கள் ஒன்றுகூடி இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை ஏராளமான ஆண்களும் பெண்களும் ஒன்றுதிரண்டனர். பின்னர் அவர்கள் ஓ.பி.எஸ். தோட்டத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகையிட்ட 10 பேரை கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கைதானவர்களை விடுவிக்க கோரி  போராட்டம் செய்தனர். அதோடு போலீஸ் வாகனத்தை எங்கும் நகர விடாமல் சுற்றி வளைத்தனர்.

இதன் காரணமாக  அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. எந்த நேரத்திலும் அசாம்பவித சம்பவம் நிகழும் என கருதப்பட்டதால் அந்த பகுதியில் அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Next Story