கச்சத்தீவை மீட்காமல் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது அமைச்சர் ஜெயக்குமார்


கச்சத்தீவை மீட்காமல் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 11 July 2017 11:00 PM GMT (Updated: 2017-07-12T01:10:29+05:30)

கச்சத்தீவை மீட்காமல் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், மீன் வளம், பால் வளம் மற்றும் கால்நடைத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் சாமி:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விடுதலை செய்யப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது. தி.மு.க. ஆட்சி காலமான 2006-2011-ம் ஆண்டு வரையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிலை இருந்தது. ஆனால், முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியும், துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினும் இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு சென்று, மீனவர்களை விடுதலை செய்ய வைத்தனர்.

2007-ம் ஆண்டு நான் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தபோது, 27 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 97 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி அன்று இரவே, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி அகமதுவிடம் பேசி, அடுத்த 30 நிமிடத்திற்குள் தமிழக மீனவர்களை விடுதலை செய்யவைத்தார். ஆனால், இன்று மீனவர்களை மீட்க முடியாத நிலை இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் ஒரு மீனவர் கூட இலங்கையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை.

அமைச்சர் டி.ஜெயக்குமார்:- தமிழக மீனவர் பிரச்சினைக்கு காரணம் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான்.

(இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்)

அமைச்சர் ஜெயக்குமார்:- கச்சத்தீவை மீட்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா குரல் கொடுத்தார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த சூழ்நிலையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை அரசின் சட்டத்தை ஏற்க முடியாது என்று தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

கச்சத்தீவை மீட்காமல் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. தமிழக மீனவர்கள் அச்சுறுத்தல் இல்லாமல் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை சிறையில் 55 தமிழக மீனவர்கள் உள்ளனர். 144 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்க 120 நாட்கள் ஆகியது. அப்போது, மீனவர்கள் மீது 32 துப்பாக்கி சூடுகள் நடந்தன. 10 பேர் இறந்தனர், 27 பேர் காயம் அடைந்தனர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:- கச்சத்தீவை தாரை வார்த்தது மத்திய அரசு. தமிழக முதல்-அமைச்சருக்கு தெரியாமலேயே அந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கு எதிராக 21-8-1971-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் ஒன்றை கருணாநிதி கொண்டுவந்தார். கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அன்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல், அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இருந்தும் அ.தி.மு.க. வெளியேறியது. எனவே, கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதற்கு முழுக்க.. முழுக்க.. காரணம் மத்திய அரசு தான். அதை எதிர்த்து அப்போது நாங்கள் (தி.மு.க.) வாதாடினோம்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி:- அன்றைக்கு இருந்த சூழ்நிலையில், அன்றைய மத்திய அரசு, அதுபோன்ற முடிவை எடுத்துள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பேன் என்றார். அது நடைபெறவில்லை. இப்போது அதற்கு என்ன வழி என்பதை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் விவாதித்தால் நன்றாக இருக்கும்.

அமைச்சர் ஜெயக்குமார்:- கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால், நமது கடல் எல்லை சுருங்கியது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசை கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தான். 1976-ம் ஆண்டு கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்திக்கொள்ளவும், யாத்திரை செல்லவும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியதாக டெசோ கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏன் கூறினார்?. அப்படி என்றால், கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு தி.மு.க. தானே காரணம்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:- அதையாவது செய்யுங்கள் என்று தான் நாங்கள் (தி.மு.க.) வலியுறுத்தினோம்.

உறுப்பினர் சாமி:- கடந்த வாரம் கடலில் மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர் குப்பன் என்பவரை, ஆந்திர மீனவர்கள் படகுடன் பிடித்து சென்றுள்ளனர். அந்தப் படகை தரையில் மோதவிட்டு சேதப்படுத்தியுள்ளனர். இப்படி, இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினை போல் உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் ஆந்திர மீனவர்கள் தாக்குதல் நடத்தியபோது, நான் ஆந்திர மீன்வளத் துறை மந்திரியை ஐதராபாத்தில் சந்தித்து பேசினேன். பின்னர், அவரும் சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனவே, மீன்வளத் துறை அமைச்சர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வுகாண வேண்டும். ஆறும், கடலும் சேரும் முகத்துவாரப் பகுதியை ஆழப்படுத்த வேண்டும். அங்கு உருவாகும் மணல் திட்டுகளில் படகுகள் மோதி மீனவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

அமைச்சர் ஜெயக்குமார்:- முகத்துவாரப் பகுதியை ஆழப்படுத்த வேண்டும் என்பது நல்ல யோசனை தான். அதனால் 3 நன்மைகள் கிடைக்கும். மீன் இன உற்பத்திக்கும், மீனவர்கள் எளிதாக படகை நிறுத்தவும், கடல் அரிப்பை தடுக்கவும் முடியும். அதை உணர்ந்து தான், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ரூ.32 கோடி செலவில் முகத்துவாரப் பகுதிகள் தூர்வாரப்பட்டுள்ளன. வரும் காலங்களில் அனைத்து முகத்துவாரங்களும் தூர்வாரப்படும். பழவேற்காடு பகுதியில் ரூ.26 கோடியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- கச்சத்தீவை மீட்பது தொடர்பாக, தி.மு.க. ஆட்சி காலத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அந்த அனைத்து கட்சி கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் அரங்கநாயகம் கலந்துகொண்டார். அவர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தி.மு.க. அரசை பதவி விலக வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்ததால், அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:- 2 விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து அன்று நீங்கள் (அ.தி.மு.க.) வெளிநடப்பு செய்தீர்கள். ஆனால், இந்த சட்டமன்றத்தில் நாங்கள் (தி.மு.க.) தீர்மானம் கொண்டுவந்தபோது நீங்கள் (அ.தி.மு.க.) ஏன் வெளிநடப்பு செய்தீர்கள்?.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story