பிரபல தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்


பிரபல தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்
x
தினத்தந்தி 12 July 2017 3:45 AM IST (Updated: 12 July 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

பிரபல தடயவியல் நிபுணரான சந்திரசேகரன் சென்னையில் நேற்று காலமானார். உடல்நல குறைவால் அவரது உயிர் பிரிந்தது.

சென்னை,

இந்திய தடயவியல் துறையில் புகழ்பெற்ற நிபுணராக விளங்கிய பி.சந்திரசேகரன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 83.

தமிழக தடயவியல் துறை தலைவராகவும், இந்திய தடயவியல் மற்றும் சர்வதேச தடயவியல்-சட்ட சேவைகள் ஆணையத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியவர் பி.சந்திரசேகரன்.

முதுமை காரணமாக இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகலில் உயிரிழந்தார்.

ராஜீவ்காந்தி கொலை சம்பவம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர், பி.சந்திரசேகரன். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மற்றும் எம்.எஸ்சி படிப்புகளும், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்பும் முடித்தவர். தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த தடயவியல் துறை தனி நிர்வாக பகுதியாக பிரிந்தபோது, அப்பிரிவின் தலைவராக பொறுப்பு ஏற்றவர் என்ற சிறப்புக்கு உரியவர். தடயவியல் துறையில் பல நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு வெடித்ததின் மூலம் பலியானார். அப்போது பலியான ராஜீவ்காந்தி உடலை உடனடியாக அடையாளம் காட்டியதோடு, அவ்வழக்கில் துப்பு துலக்கி சேகரித்த ஆதாரங்களை அறிக்கைகளாக அரசுக்கு சமர்ப்பித்தவர்.

சவாலான பல வழக்குகளில் உண்மை நிலையை கண்டறிந்தவர். பல சிறப்புகளுக்கு சொந்தக்காரரான இவர், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருது பெற்றவர்.

பணி ஓய்வுக்கு பிறகு தடயவியல் துறை அதிகாரிகளுக்கு பல வகைகளில் ஆலோசனை தந்து வந்த, பி.சந்திரசேகரன் தனது மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளோடு ஓய்வு எடுத்து வந்தார். அவரது மரணம் தடயவியல் துறைக்கு ஏற்பட்ட இழப்பு என்று குறிப்பிடப்படுகிறது.

Next Story