ஜி.எஸ்.டி. வரியை தமிழக அரசு ஏற்கிறதா?, இல்லையா? அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.சி.வீரமணியின் எதிரும் புதிருமான கருத்துகள் உறுப்பினர்கள் குழப்பம்


ஜி.எஸ்.டி. வரியை தமிழக அரசு ஏற்கிறதா?, இல்லையா? அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.சி.வீரமணியின் எதிரும் புதிருமான கருத்துகள் உறுப்பினர்கள் குழப்பம்
x
தினத்தந்தி 12 July 2017 9:45 PM GMT (Updated: 12 July 2017 7:31 PM GMT)

ஜி.எஸ்.டி. வரியை தமிழக அரசு ஏற்கிறதா?, இல்லையா? என்பதற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.சி.வீரமணி ஆகியோர் எதிரும் புதிருமான கருத்துகளை தெரிவித்ததால் உறுப்பினர்கள் குழப்பம் அடைந்தனர்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி தொகுதி) பேசினார். முன்னாள் அமைச்சரான இவர், தனது பேச்சை தொடங்கும்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரை பாராட்டி பேசினார்.

பின்னர், மானியக் கோரிக்கை விவாதத்தில் அவர் பேசத் தொடங்கினார். ஆனால், பேச்சின் தொடக்கத்தில் தனது தொகுதி சார்ந்த பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போனார். மேலும், ஜி.எஸ்.டி. வரிக்கு எதிரான கருத்துகளையும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் பேசும்போது அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கமாட்டார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தான் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். அதற்கு, அமைச்சர்கள் உடனுக்குடன் பதில் அளிப்பார்கள்.

தைரியம் இல்லையா?

ஆனால், நேற்று செந்தில் பாலாஜி பேசியபோது, அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் எதிர்பார்க்கவில்லை. அமைச்சர் கே.சி.வீரமணியும் அவரது கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தார்.

அந்த நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, “எங்கள் உறுப்பினர் கன்னி பேச்சு பேசியபோதும் அமைச்சர் குறிக்கிட்டு பதில் அளித்தார். ஆனால், உறுப்பினர் செந்தில் பாலாஜி வெளுத்து வாங்குகிறார். ஆனால், பதில் அளிக்காமல் அமைச்சர் இருக்கிறார். தைரியம் இல்லையா?, வாய்ப்பு இல்லையா?” என்று கேட்டார்.

பின்னர் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, “உறுப்பினர் நம்முடைய பகுதியை (அ.தி.மு.க.) சேர்ந்தவர். ஆதரவாக பேசுங்கள்” என்றார். தொடர்ந்து பேசிய அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன், “உறுப்பினர் இங்கே தொகுதி மக்களின் பிரச்சினையை தான் கூறினார். நாங்களும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்” என்றார்.

உறுப்பினர்கள் குழப்பம்

அவரைத் தொடர்ந்து, சற்று நேரத்தில் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, “இந்த அரசு ஜி.எஸ்.டி. வரியை ஏற்கிறதா?, இல்லையா?. உணவு பண்டங்களின் விலை உயர்ந்து இருக்கிறது. ஓட்டலில் போய் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, “ஜி.எஸ்.டி. வரியை அறிமுகம் செய்து வித்திட்டது காங்கிரஸ் தான். அன்றே அதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால், அன்று நீங்கள் அறிமுகம் செய்துவிட்டு, எங்களை ஏன் இன்று கேட்கிறீர்கள்?. ஜி.எஸ்.டி. வரியை அரசு எதிர்க்கும். அதில் உள்ள குறைகளை தீர்த்துவைக்க வலியுறுத்துவோம்” என்றார்.

பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மத்திய அரசின் சட்டங்களை மாநில அரசுகள் ஏற்பது தான் நடைமுறை. ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்தால், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ‘வாட்’ வரி வசூலிக்க முடியாது. ஜி.எஸ்.டி. வரியில் சில திருத்தங்கள் செய்ததால் அதை ஏற்றுக்கொண்டோம்” என்றார்.

அதாவது, ஜி.எஸ்.டி. வரியை எதிர்ப்பதாக அமைச்சர் கே.சி.வீரமணியும், ஆதரிப்பதாக அமைச்சர் ஜெயக்குமாரும் சட்டசபையில் எதிரும் புதிருமான கருத்துகளை தெரிவித்ததால் உறுப்பினர்கள் குழப்பம் அடைந்தனர். 

Next Story