அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தையிடம் வருமான வரித்துறை விசாரணை


அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தையிடம் வருமான வரித்துறை விசாரணை
x
தினத்தந்தி 15 July 2017 3:30 AM IST (Updated: 15 July 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

விஜயபாஸ்கர் தந்தையிடம் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் 6 மணி நேரம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை,

கல்குவாரியில் சிக்கிய ஆவணங்கள் குறித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தந்தையிடம் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் 6 மணி நேரம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டையில் உள்ள அவருடைய தந்தை சின்னதம்பி வீடு மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் விஜயகுமார் குடும்பத்தினரால் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசலில் நடத்தப் படும் கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு கற்கள் வெட்டி எடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.

கல்குவாரி முறைகேடு குறித்து விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, கல்குவாரியின் தணிக்கையாளர் உள்பட பலரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் சின்னதம்பி நேற்று காலை 9.15 மணியளவில் ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கல்குவாரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து மதியம் 2.15 மணி வரை 6 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினர்.

இன்றும், நாளையும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விடுமுறை என்பதால் சின்னதம்பியை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

சின்னதம்பியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை முழுமையாக நிறைவடைந்தவுடன், இதுதொடர்பான மேல் விசாரணை அமலாக்கத்துறையினர் வசம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story