960 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் காமராஜர் விருது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


960 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் காமராஜர் விருது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 July 2017 4:15 AM IST (Updated: 16 July 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பாக தேர்ச்சி பெறும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருதும், ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் கே.வி.எஸ்.பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வித்திருவிழா நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் என்.எஸ்.வி.சித்தன் தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை, தென்காசி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

இந்த விழாவில் வந்தோம், சென்றோம் என்று இல்லாமல் வந்தோம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டோம் என்ற வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தபடி ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

ஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளை ஒரு மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு காமராஜர் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் 15 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு காமராஜர் விருதும், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9, 10, 11, 12-ம் வகுப்புகளை கணினி மயமாக்குவதற்காக ரூ.324 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பேசும்போது, பள்ளிகல்வித்துறை அமைச்சர் நாடார் சமுதாய மக்கள் நடத்தும் பள்ளி நிர்வாகங்கள் தரும் விண்ணப்பங்களை பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றும், அரசு பள்ளிகளில் ஏதேனும் ஒரு வகுப்பறையில் காமராஜர் சிலை வைக்க நாடார் சமுதாயம் உதவி செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம்

முன்னதாக காலையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கல்வித் திருவிழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மக்கள் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக கருதி அவற்றுக்கு தீர்வு கண்டவர் காமராஜர். மக்கள் நலனுக்காக மெழுகுவர்த்தியாக தன்னை உருக்கி தியாகம் செய்தவர். அதனால் தான் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கிறது. நாட்டு மக்களின் நெஞ்சத்தில் அவர் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.

பெருந்தலைவர் காமராஜர் பசியின் கொடுமையை உணர்ந்தவர். ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்கியவர். அரசு அதிகாரிகள் அவரை படிக்காத மேதை என்று பாராட்டும் வகையில் ஆட்சி செய்தார். கல்வி மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் முத்திரை பதித்தவர். பெருந்தலைவர் காமராஜரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க.

அடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-

நாங்கள் இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு காரணம் எங்களுக்கும் அவரது ஆசி வேண்டும் என்பதால் தான். என்றென்றும் அவரது புகழ் நிலைத்து இருக்கும். அவர் காட்டிய பாதையில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வசந்தகுமார்

கல்வித் திருவிழாவில் நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் கலந்துகொண்டு, காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Next Story