ஜனாதிபதி தேர்தலை பா.ம.க. புறக்கணிக்கும் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு


ஜனாதிபதி தேர்தலை பா.ம.க. புறக்கணிக்கும் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 July 2017 12:45 AM IST (Updated: 16 July 2017 10:40 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலை பா.ம.க. புறக்கணிக்கும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ஜனாதிபதி தேர்தலை பா.ம.க. புறக்கணிக்கும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் ஜனாதிபதி தேர்தலில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாக்களிக்கமாட்டார்.

பா.ம.க.வின் 29–வது ஆண்டு தொடக்க விழா சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி உள்பட பா.ம.க. நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையடுத்து பா.ம.க. சென்னை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

1989–ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் கூடி, பா.ம.க. தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நாங்கள் செய்த சாதனைகளை போன்று எந்த கட்சிகளும் செய்யவில்லை. தமிழக மக்களுக்கு, தமிழ் மண்ணுக்கு, தமிழ் மொழிக்கு, என ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு போராடும் கட்சி என்றால் அது பா.ம.க. தான்.

அ.தி.மு.க. முடிந்து போன கட்சி. அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள். ஆனால் அ.தி.மு.க. அந்த விளக்கில் எரிந்து போன திரி. தி.மு.க. வரும் என்று கனவு காண்கிறார்கள். அந்த கனவு ஒருபோதும் பலிக்காது. அ.தி.மு.க., தி.மு.க. இடங்களை தமிழகத்தில் பா.ம.க. பிடிக்கும்.

அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளோடு கூட்டணி வைப்பீர்களா? என்று யாரும் கேட்கவேண்டாம். ஒருபோதும் அந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம். எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம். வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

எம்.பி. தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெறுவோம். சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களை பிடிப்போம். டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு எல்லா தரப்பு மக்களிடமும், குறிப்பாக பெண்களிடமும் நல்ல ஆதரவு இருக்கிறது. மாற்றம் அடைந்தே தீரும். மாற்றம் வந்தால்தான் தமிழகம் முன்னேறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ராமதாஸ் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு என்ன?

பதில்: எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கிறோம்.

கேள்வி: துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?

பதில்: கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

இதனால் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கமாட்டார் என்று தெரிகிறது.


Next Story