ஜனாதிபதி தேர்தல்: அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை
நாட்டின் 14–வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
சென்னை,
நாட்டின் 14–வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. டெல்லி பாராளுமன்றத்திலும், மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகத்திலும் நடைபெறும் இந்த தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர்.
தமிழகத்தில், அ.தி.மு.க. அம்மா அணி, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த 135 எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில், 122 பேர் அ.தி.மு.க. அம்மா அணியையும், 12 பேர் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கூட்டணி கட்சியை சேர்ந்த தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி) ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
ஜனாதிபதி தேர்தலையொட்டி, அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று மாலையே சென்னை வந்து, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கினார்கள். இந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியின் அவைத் தலைவரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அங்கு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்தும், அதற்கான விதிமுறைகள் குறித்தும் உறுப்பினர்களிடம் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிகிறது.
Related Tags :
Next Story