ஜனாதிபதி தேர்தல் தமிழகத்தில் 234 பேர் வாக்களித்தனர் கருணாநிதி வாக்களிக்கவில்லை


ஜனாதிபதி தேர்தல் தமிழகத்தில்  234 பேர் வாக்களித்தனர்  கருணாநிதி வாக்களிக்கவில்லை
x
தினத்தந்தி 17 July 2017 9:25 AM GMT (Updated: 17 July 2017 9:24 AM GMT)

ஜனாதிபதி தேர்தல் தமிழகத்தில் 2 மணி நேரத்தில் ஓட்டுபதிவு முடிவுற்றது மொத்தம் 234 பேர் வாக்களித்தனர்.கருணாநிதி வாக்களிக்கவில்லை

சென்னை,

ஜனாதிபதி தேர்தலில்  இன்று காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் நபராக சென்று பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு தனது வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர்  தனபால், எதிர்க் கட்சி  தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தார். காலை 8.17 மணிக்கெல்லாம் அவர் சென்னை தலைமை செயலகக்துக்கு வந்து விட்டார். 6 வது நபராக வந்து அவர் தன் வாக்கை பதிவு செய்தார்.

ஒட்டுச்சாவடி அறைக்குள் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏஜெண்டாக  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பணியாற்றினார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செம்மலை, தி.மு.க. சார்பில் கொறடா சக்கரபாணி பணியாற்றினார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலையிலேயே தலைமை செயலகத்துக்கு வந்திருந்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9 மணிக்கெல்லாம் கோட்டைக்கு வந்திருந்தனர்.

10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் எம்.எல்.ஏ.க் கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். முதல் 30 நிமிடத்தில் அதாவது 10.30 மணிக்குள் 50 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்திருந்தனர்.

தமிழக சட்டசபை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. இதில் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. மீதமுள்ள 233 எம்.எல்.ஏ.க்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை, உடல்   நலக்குறைவு காரணமாக வாக்களிக்க வர இயலாத நிலையில் உள்ளார்.

எனவே 232 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தனர். இவர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு தொடங்கி 11.55 மணிக்குள் வாக்களித்தனர். இதனால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் 2 மணி நேரத்தில் நடந்து முடிந்து விட்டது.

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி ஏஜெண்டு செம்மலை   கடைசியாக வாக்களித்தார்.  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கேரள மாநில எம்.எல்.ஏ. அப்துல்லா ஆகியோரும் சென்னையில் வாக்களித்தனர். இதனால் சென்னை கோட்டையில் 233 எம்.எல்.ஏ.க்களும், ஒரு எம்.பி.யும் வாக்களித்துள்ளனர்.

புதுச்சேரியிலும்  சுமார் 2 மணி நேரத்துக்குள் 30 எம்.எல்.ஏ.க்களும்  வாக்கு அளித்து முடித்து விட்டனர். அந்த  மாநில ஓட்டுகள் கொண்ட வாக்கு பெட்டியும் 5 மணிக்கு சீல் வைத்து சென்னைக்கு எடுத்து வரப் படும். பிறகு தமிழகம், புதுச்சேரி இரு மாநில ஓட்டுப் பெட்டிகளும் ஒன்றாக சென்னையில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்படும்.

Next Story