ஆதாரங்களுடன் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் எங்கள் மீது வழக்கு போட தயாராக இருக்கிறார்களா?
ஆதாரங்களுடன் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் எங்கள் மீது வழக்கு போடுவதற்கான தைரியம் இந்த அரசுக்கு இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இன்றைக்கு பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய மத்திய பாரதீய ஜனதா கட்சி தொடக்கத்தில், அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையோடு, போட்டியின்றி ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு கபட நாடகத்தினை நடத்திவிட்டு, தன்னிச்சையாக ஒரு வேட்பாளரை நிறுத்திய காரணத்தால், இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பது உள்ளபடியே வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.இருந்தாலும், ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா நிறுத்தியுள்ள வேட்பாளரை எதிர்த்து 17 கட்சிகளை கொண்ட ஒரு கூட்டணியாக சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு, களத்தில் இறக்கியிருக்கின்றன என்று சொன்னால், அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு அடிகோலாக அமைந்திருக்கிறது என்பது தான் எனது கருத்து. அந்தவகையில், இன்றைக்கு தி.மு.க. சார்பில் ஜனநாயக அடிப்படையில் எங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கிறோம்.
அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, வாக்களித்திருக்க கூடியவர்களுக்கு, ஓட்டுரிமை பெற்றிருக்க கூடியவர்களுக்கு ஜனநாயக ரீதியில் ஓர் அரசை விமர்சிப்பதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அந்த அடிப்படையில்தான் கமல்ஹாசன் தன்னுடைய கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார். அப்படி எடுத்து வைத்திருக்கக்கூடிய காரணத்தால், அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கக்கூடிய பலர் இன்றைக்கு அவரை மிரட்டுவது, அச்சுறுத்துவது, வழக்கு போடுவேன் என்று சொல்வது எல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.பொத்தாம் பொதுவாக ஊழல் நடந்துக்கொண்டிருக்கிறது, முறைகேடு நடந்துக்கொண்டிருக்கிறது, அனைத்துத் துறைகளிலுமே ஊழல் என்றுதான் அவர் சொன்னார்.அதற்கே அவர் மீது வழக்கு போடுவோம் என்று சொல்பவர்கள், நான் ஆதாரங்களோடு சட்டமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் விஜயபாஸ்கர் செய்திருக்கக்கூடிய ஊழல், அதேபோல முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கக்கூடிய ஊழல், போலீஸ் கமிஷனர் செய்திருக்கக்கூடிய ஊழல் என இந்த ஊழல்கள் மீதெல்லாம் வருமான வரித்துறையினர் மூலமாகவும், அதேபோல தேர்தல் கமிஷன் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்திருக்கக்கூடிய அந்த கடிதங்களின் அடிப்படையில், நான் தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லி கொண்டிருக்கிறேன்.
கமல்ஹாசன் மீது வழக்கு போடுவேன் என்று சொல்லக்கூடிய அந்த தைரியம், அந்த பிரசாரம், இன்றைக்கு தி.மு.க. சார்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லி கொண்டிருக்கும் எங்கள் மீது அவர்கள் வழக்குப்போட தயாராக இருக்கிறார்களா? அப்படி, வழக்கு போட்டால் அதை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.