பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு: பள்ளி நிர்வாகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு


பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு:  பள்ளி நிர்வாகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 July 2017 10:15 PM GMT (Updated: 18 July 2017 8:59 PM GMT)

பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த பின்னர் பள்ளியில் நடந்த பெற்றோர்கள் கூட்டத்தில் பள்ளி நிர்வாகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள நாட்டரசம்பட்டு ஊராட்சி காட்டுப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 32), இவரது மகன் சபரிஷ் (6). காவனூரை அடுத்த வடமேல்பாக்கம் லயோலா அகாடமி பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

பள்ளி வளாகத்தில் குப்பை கொட்டுவதற்காக 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. கடந்த 12-ந் தேதி அந்த பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் தவறி விழுந்து சபரிஷ் பரிதாபமாக இறந்தான். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி முதல்வர் ராபர்ட் (58), உடற்பயிற்சி ஆசிரியர் அசோக்குமார் (23), ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் கூட்டம் நடைபெறும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று காலை மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர்.

அப்போது பள்ளி வளாகத்தில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உயிரிழந்த சபரிஷ் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசினார்.

அப்போது சபரிஷின் தந்தை தேவராஜ் மற்றும் உறவினர்கள், பாதிக்கப்பட்ட எங்களுக்கு எந்த விதமான தகவலும் தெரிவிக்காமல் பள்ளியில் பெற்றோர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். நாங்களும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் அவர்களில் 5 பேரை மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதித்தார்.

இதில் கலந்துகொண்ட சபரிஷ் தந்தை தேவராஜ் கூறியதாவது:-

என்னுடைய மகன் இறந்த தகவலை கூட பள்ளி நிர்வாகம் எனக்கு முறையாக தெரிவிக்கவில்லை. போலீசார்தான் எனக்கு என் மகன் இறந்த தகவலை முதலில் தெரிவித்தனர். என் மகனுக்கு ஏற்பட்ட சம்பவம் போல் இந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கு ஏற்படக்கூடாது. இப்போது கூட பெற்றோர்கள் கூறும் குறைகளுக்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறி வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story