332 இடங்களுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்கியது
கால்நடை மருத்துவ படிப்புகளில் 332 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
சென்னை,
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2017–2018–ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும்(வியாழக்கிழமை), தொழில்நுட்ப பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நாளையும்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.பொதுப்பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) 320 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதன்படி 48 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 272 இடங்களுக்கும், அதேபோல் தொழில்நுட்ப பிரிவில் 60 இடங்கள் என மொத்தம் 332 இடங்களுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.
இதில் பொதுக்கல்வி பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) மாற்றுத்திறனாளிகளுக்கு(சிறப்பு பிரிவு) 16 இடங்களும், விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு 5 இடங்களும் (ஆண்–3, பெண்–2), முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 2 இடங்களும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 16 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெற்றது.இதுபோக, மீதமுள்ள 233 இடங்களுக்கு இன்று பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த இடங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 115 பேர் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதேபோல், தொழில்நுட்ப பாடப்பிரிவுகளான உணவு தொழில் நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள 80 இடங்களுக்கான கலந்தாய்வும் இன்று நடைபெறுகிறது. இந்த இடங்களை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியவர்களுக்கு ஒதுக்கீடு கிடையாது.அந்தவகையில், உணவு தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 396 பேரையும், கோழியின தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 364 பேரையும், பால்வள தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 520 பேரையும் கலந்தாய்வுக்காக அழைத்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழு தலைவரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலருமான சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.