தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?


தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
x
தினத்தந்தி 20 July 2017 3:45 AM IST (Updated: 19 July 2017 10:09 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குட்கா பாக்கெட்டுகளை காட்டி பேசி முடித்து, தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்த பிறகு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசினார். அவர் பேசும்போது, ‘‘இங்கு நடந்த நிகழ்வை பார்க்கும்போது, தமிழகத்தில் குட்கா விற்பனை அதிகம் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால், இந்த நிலையை சட்டமன்றத்தில் காட்டியதற்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

அப்போது, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுந்து குட்கா பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புகையிலையால் ஏற்படும் வாய்ப்புற்றுநோய் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் வண்ணம், புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்மான பொருளாகக் கொண்ட, வாயிலிட்டு மெல்லும் வகை புகையிலை பொருட்களான, குட்கா, பான்மசாலா மற்றும் வேறு எந்த சுவைக்கும் பொருளை தயாரிக்கவும், சேமிக்கவும், விற்பனை செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு ஆணையை தொடர்ந்து 23–5–2013 நாளிட்ட தமிழக அரசிதழில் தடை விதித்து ஆணை வெளியிடப்பட்டது.

தடையாணையை சீரிய முறையில் நடைமுறைப்படுத்த ஏதுவாக அந்தந்த மாவட்ட கலெக்டரின் தலைமையிலும், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் சென்னை பெருநகர மாநகராட்சி கமி‌ஷனர் தலைமையிலும், பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு குழுவின் ஒத்துழைப்புடன் உணவு பாதுகாப்புத்துறை எடுத்த நடவடிக்கையின் பயனாக ஜூன் 2013 முதல் மே மாதம் 2017 வரை, 15.47 கோடி ரூபாய் மதிப்புள்ள 546 டன்னுக்கும் அதிகமான குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. மேல் நடவடிக்கையாக 48 வழக்குகள் போடப்பட்டு, 22 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அபராத தொகையாக 6 லட்சம் ரூபாய்க்கு மேலாக பெறப்பட்டுள்ளது. குட்கா, பான்மசாலா தடையாணையோடு மெல்லும் புகையிலைக்கும் சேர்த்து 23–5–2017 முதல் தடையாணை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016–17–ம் ஆண்டு மட்டும் பான் மசாலா, போதை சாக்லெட் போன்றவை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே, விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு, 13 ஆயிரத்து 916 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே இயங்கிவரும் 35 ஆயிரத்து 919 கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 6 ஆயிரத்து 880 கடைகளில் மயக்கம் தரும் சாக்லெட் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட 38 பொருட்களும், இதர 71 பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 19 பொருட்கள் உடலுக்கு கேடுவிளைவிப்பவையாக கண்டறியப்பட்டது.

அ.தி.மு.க. அரசை பொறுத்தவரைக்கும் இந்த போதை பொருள் எங்கும் விற்க கூடாது அதற்கு உண்டான நடவடிக்கை உன்னிப்பாக கவனித்து எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story