பொதுத்துறை நிறுவனங்களால் ஒட்டுமொத்த இழப்பு ரூ.80,925 கோடி


பொதுத்துறை நிறுவனங்களால் ஒட்டுமொத்த இழப்பு ரூ.80,925 கோடி
x
தினத்தந்தி 19 July 2017 10:15 PM GMT (Updated: 2017-07-20T01:09:02+05:30)

தமிழக அரசின் வருவாய் வளர்ச்சி விகிதம் 5.38 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2016–ம் ஆண்டு மார்ச் வரையிலான அறிக்கை வைக்கப்பட்டது. அதுகுறித்து தலைமை பொது கணக்காய்வாளர் தேவிகா நாயர் அளித்த பேட்டி வருமாறு:–

2013–16–ம் ஆண்டு வரையிலான காலத்தில் மாநில கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ஏற்பட்ட உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் கடனுக்கான வட்டி சுமையான ரூ.963.73 கோடியும் இணைந்ததால் அவற்றுக்கு ஆயிரத்து 95 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

அதிகம் முற்றிய கரும்பை பிழிந்தது, உற்பத்தியில் நெறிமுறைகளை பின்பற்றாதது, நவீனமயமாக்கல் திட்டத்தின் தாமதம் போன்றவற்றால் சர்க்கரை மீட்பு திறன் பாதிக்கப்பட்டதோடு வருவாய் இழப்பு ஏற்பட்டு ரூ.48 கோடி மிகைச் செலவு ஏற்பட்டது. பதிவு செய்யப்படாத கரும்பு பரப்பான 12 ஆயிரத்து 463 ஏக்கர், சம்பந்தப்பட்ட ஆலைகளுடன் இணைக்கப்படவில்லை. முந்தைய தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டாலும் அதே குறைகள் இன்னும் தொடர்கின்றன.

தானே புயலால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களை மீட்பதற்காக பணியாளர்களை பயன்படுத்தியதால் ஒப்பளிக்கப்பட்ட திட்ட செலவுக்கான நிதியை பயன்படுத்த முடியவில்லை என்றும், இனி வரும் ஆண்டுகளில் அந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு கூறியது. ஆனால் இந்த பதிலை ஏற்க முடியாது. தானே புயல் 2011–ம் ஆண்டு டிசம்பரில் வந்தது. இதற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி, அந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பரில் தரப்பட்டது. இந்த நிதியை 2013–14–ம் ஆண்டில் கூட பயன்படுத்தவில்லை. மத்திய அரசு நிதியை மாற்றும் நடைமுறையில்கூட 2 முதல் 5 மாத காலதாமதம் ஏற்பட்டது.

மாநில அரசின் வருவாய் வரவுகள் ஒரு லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாயாகும். வருவாய் வளர்ச்சி விகிதம் 5.38 சதவீதமாகும். வருவாய் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தாலும் மற்ற ஆண்டுகளைக் கணக்கிடும்போது இது குறைவானதாகும். 2011–12–ம் ஆண்டில் 21.39 சதவீதமும், 2013–14–ம் ஆண்டில் 9.32 சதவீதமும், 2014–15–ம் ஆண்டில் 13.31 சதவீதமுமாக இருந்தது. சொந்த வரி வருவாய் குறைவினாலும், உதவி மானியங்களை சரியாக பெறாமல் போனதாலும் அதன் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

2014–15–ம் ஆண்டில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 847 கோடி ரூபாயாக இருந்த நிதிப் பொறுப்பு, 2015–16–ம் ஆண்டு முடிவில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 30 கோடி ரூபாயாக உயர்ந்தது.

2011–12, 2012–13–ம் ஆண்டுகளில் மிகை வருவாயை அனுபவித்த தமிழகம், 2013–14–ம் ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறையை பதிவு செய்தது. 2015–16–ம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.11 ஆயிரத்து 985 கோடியாக இருந்தது. வருவாய் மிகை என்ற நிலையை எட்ட மாநிலம் தவறியதோடு, முன்மொழியப்பட்ட இலக்குக்குள் வருவாய் பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் அரசு தவறிவிட்டது.

சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம்: இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளால் ரூ.9 ஆயிரத்து 228.51 கோடி நிதி வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் ரூ.2 ஆயிரத்து 500 கோடியை மட்டும் அரசு ஒப்பளிப்பு செய்ததால் பணிகள் சுருங்கின. மழைநீரின் தடையில்லா ஓட்டத்துக்காக மழைநீர் வடிகால்கள் இயற்கையான நீர்நிலைகளுடன் இறுதியாக இணைக்கப்படவில்லை.

வளைந்து கொடுக்கும் தன்மையுடைய இரும்பு குழாய்களுக்கு பதிலாக வார்ப்பிரும்பை பயன்படுத்தியதால் ரூ.35.97 கோடி அளவு தவிர்க்க கூடிய செலவு ஏற்பட்டது. ஒப்பந்தப்புள்ளி கோராமல் சாலை பணிகளை வழங்கியதால் ரூ.4.69 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. அங்கீகாரம் பெறாத ஆயிரத்து 946 பணிகளுக்கு பணி முடிந்த பிறகு ஒப்பளிப்பு வழங்கப்பட்டது.

ஆதிதிராவிடர் வகுப்பினர், பழங்குடியினர் பயனாளிகளுக்கு உதவுவதற்காக 2014–15, 2015–16–ம் ஆண்டில் மத்திய அரசால் ரூ.32.15 கோடிக்கு தனி நிதி அளிப்பு அளித்தாலும், டான் கோடா நிறுவனம் ரூ.20.35 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கியது. இந்த இரண்டு ஆண்டுகளிலும் செய்யப்பட்ட செலவீனம் ரூ.14.59 கோடியாக இருந்தது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூக பிரிவினரின் நலனுக்காக என்.எச்.எம். அளித்த ரூ.17.56 கோடி, பொது பயனாளிகளுக்காக திருப்பிவிடப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story