நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரிவாக்கம்; சென்னை குடிநீர் வாரியம் திட்டம்


நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரிவாக்கம்; சென்னை குடிநீர் வாரியம் திட்டம்
x
தினத்தந்தி 21 July 2017 3:45 AM IST (Updated: 20 July 2017 9:45 PM IST)
t-max-icont-min-icon

நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் ஆலோசித்து வருகிறது.

சென்னை,

கோடை காலம் தொடங்கியது முதல் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஏரிகளிலும் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், விவசாய கிணறுகள், கல் குவாரிகள், நெய்வேலி சுரங்கம், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை சென்னைக்கு ஏற்பட்டு உள்ளது.

சென்னைக்கு ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகளின் பம்பு செட்டுகளில் இருந்து 115 மில்லியன் லிட்டர், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 130 மில்லியன் லிட்டர், நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து 200 மில்லியன் லிட்டர், கல்குவாரிகளில் இருந்து 40 மில்லியன் லிட்டர், போரூர் ஏரியில் இருந்து 4 மில்லியன் லிட்டர் என தினசரி 489 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தென்சென்னை பகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மேடவாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மயிலாப்பூர், ஆலந்தூர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்களுக்கு நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், மாதவரம், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் தினமும் போதிய அளவு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–

நெம்மேலி அருகில் ரூ.1,350 கோடியில் 150 மில்லியன் லிட்டர் பெறும் வகையில் மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. போரூரில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 200 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. ஆக கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 750 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறுவதற்கான திட்டம் உள்ளது. இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் ஏரிகளை நம்பி இருக்க வேண்டியது இல்லை.

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து மேலும் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணியை தொடங்கினால் குறைந்தபட்சம் 4 நாட்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கும். எனவே மழைகாலத்தில் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி ஓரளவு குடிநீர் வினியோகம் செய்யும் போது இந்த பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Next Story